சபரிமலையில் 51 பெண்கள் தரிசனம் செய்தார்களா? கேரள அரசின் அறிக்கையில் குளறுபடி!

சபரிமலையில் 51 பெண்கள் நுழைந்ததாக கேரள அரசு தவறான பட்டியல் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


சபரிமலை பெண்கள் தரிசன விவகாரத்தில், தொடர்புடைய பெண்கள் அச்சத்தின் காரணமாக வயதை அதிகரித்துச் சொல்வதாக கேரள அரசு குற்றம்சாட்டியுள்ளது.

 

சபரிமலை கோவிலில் தரிசனம் செய்த பெண்களான பிந்து அம்மிணி, கனகதுர்கா ஆகியோருக்கு இந்து அமைப்புகளிடம் இருந்து மிரட்டல் எழுந்ததால் அவர்கள் கடந்த 2 வாரங்களாக தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு கோரி உச்சநீதிமன்றத்தில் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். 

 

அந்த வழக்கு விசாரணையின் போது சபரிமலை கோவிலில் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் ஆனால் 2 பெண்கள் தரிசனம் செய்தது மட்டுமே வெளியில் தெரிந்துள்ளதாகவும் கேரள அரசுத் தரப்பில் தெரிவிக்கபப்ட்டது. இதன் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு சிறப்பாக நடைமுறைப் படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டது. 

 

இந்த வழக்கில் 2 பெண்களுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கோவிலில் பரிகார பூஜை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அந்தப் பெண்களின் கோரிக்கைகளை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. 

 

இதனிடையே 51 பெண்கள் சென்றதாக கேரள அரசு தாக்கல் செய்த மனுவில் குளறுபடிகள் இருப்பதாகவும் அந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான பெண்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் புகார் எழுந்தது. 

 

இந்நிலையில் பலர் தங்களை அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள், போராட்டங்களில் இருந்து காத்துக்கொள்ள வயது விவகாரத்தில் பொய் கூறுவதாக கேரள அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.