மோக்ஷமளிக்கும் கருட சேவை! காசிக்குப் போனாலும் கிடைக்காத மாசி மாத கருட சேவை!

மஹா விஷ்ணுவிற்கு வாகனமாகவும் கொடியாகவும் விளங்குவது கருடன்.


புள்ளரையன், பக்ஷி ராஜன், நாகப் பகையோன், சுபர்ணன் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் திருவைகுந்தத்தில் எப்போதும் எம்பெருமானுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ஒரு நித்ய சூரி. எம்பெருமானை தாங்குவதில் முதன்மையானாவ்ர் எனவே வைணவ சம்பிரதாயத்தில் இவர் பெரிய திருவடி என்றழைக்கப்படுகின்றார்.

மனித முகத்துடன், பெரிய மீசையுடனும், கருடன் போன்ற அலகுடனும், உடல் முழுவதும் எட்டு நாகங்கள் ஆபரணமாக தரித்து , ஒரு காலை முழங்காலிட்டு மடித்தும் மற்றோரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில் , இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களைத் தாங்குவதற்காக நீட்டி பெரிய இறக்கைகளுடன் கருடாழ்வாரின் அழகே ஒரு அழகு.

பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம். அனைத்து ஆழ்வார்களும் ( தன் ஆச்சாரியரை மட்டுமே பாடிய மதுரகவியாழ்வார் தவிர ) மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் திருவரங்கம் ஆகும். இத்தலத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மாமணி மண்டபத்தருகில் நடைபெறுகின்றது.

பெருமாள் அன்று தங்க கருடனில் சேவை சாதிக்கின்றார். மேலும் தை மாசி பங்குனி மாத உற்சவங்களின் போதும் நம்பெருமாள் கருட சேவை தந்தருளுகிறார். இவற்றுள் மாசி கருட சேவை மிகவும் சிறப்பு பெற்றது. மாசி கருடன் காசிக்குப் போனாலும் கிடைக்காது என்பது வழக்கு அக்கருட சேவையை கண்டு மகிழுங்கள்.

ஸ்ரீ ரங்கத்தில் மாசி மாத கருட வாகனத்தில் உலா வரும் பெருமாளை தரிசனம் செய்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பது நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கருட சேவை தெப்பத்திருவிழாவின் நான்காம் நாள் உற்சவம் இன்று நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8ம் நாளான மார்ச் 5ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார்.

ஸ்ரீரங்கம் கோயில் வாகனங்களுக்கு தனிமகத்துவம் உள்ளது. அந்த வகையில் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா வந்தபின், கருடனுக்கு கொழுக்கட்டை அமுது படைக்கப்படும். அப்போது மாசி கருடனை தரிசனம் செய்வதால் காசிக்கு சென்ற பலன் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஸ்ரீரங்கத்தில் மாசி மாதம் மட்டும் நடைபெறும் வெள்ளி கருடசேவை சிறப்பு வாய்ந்தது. ஸ்ரீரங்க ஸ்தலமானது சுக்ர ஸ்தலம் என்பதால் இங்கு வெள்ளி உலோகம் மிகவும் விசேஷமானது. இத்தகைய சிறப்பு வாய்ந்தது மாசி கருடன். இது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வரும் மிக விசேஷமான காட்சி. இந்த வெள்ளி கருட சேவையின் சிறப்பைக் கூறும் மாசி கருடன் காசியிலும் கிடைக்காது என்ற பழமொழி பழக்கத்தில் உள்ளது