தினகரன் வீசிய பண வலை! எஸ்கேப்பான கமல்! காரணம் ரஜினி! ட்வீட்டில் உள்குத்து!

தனியே நின்றாலும் நிற்பேனே தவிர, தினகரனுடன் போகமாட்டேன் என கமல்ஹாசன் கூறியுள்ளதன் பின்னணியில் நடிகர் ரஜினி இருக்கிறாராம்.


தினகரன் கட்சியுடன் மட்டும்தான் கூட்டு சேர வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேறியிருக்கிறார் கமல். தனியே தேர்தலில் நிற்பதாக எடுத்திருக்கும் முடிவுக்கு காரணம் ரஜினிகாந்த் டிவீட் என்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரே ஒரு தொகுதியைக் கேட்டு வந்தார் கமல்ஹாசன். ஆனால், அவரிடம் எந்த கட்டமைப்பும் கிடையாது, வெறித்தனமான ரசிகர்களும் கிடையாது. பிறகு எதற்காக ஒரு சீட்டை வீணடிக்க வேண்டும் என்று நோ சொல்லிவிட்டார் ஸ்டாலின்.

அ.தி.மு.க. கூட்டணியுடன் ஆரம்பத்தில் இருந்தே வாய்க்கால் தகராறு என்பதால் அங்கே போக முடியாது. இந்த நிலையில், கமல் கட்சிக்கு இருந்த ஒரே வாய்ப்பு தினகரன் மட்டும்தான். கமல் வருகிறார் என்றதும் தினகரனிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கமல்ஹாசனுக்கு எத்தனை சீட் வேண்டுமானாலும் கொடுப்பதற்கும், அந்த இடங்களில் எல்லாம் தேவையான செலவுக்குப் பணம் கொடுப்பதற்கும் தினகரன் தயாராகவே இருந்தார். இதைக் கேட்டு கமல்  கட்சியினரும் குஷியாக இருந்தார்கள். தினகரனுடன் சேர்ந்தால் எப்படியும் குறிப்பிட்ட சதவிகித வாக்குகள் வாங்கிவிடலாம் என்று மனக்கணக்கு போட்டார்கள்.

ஆனால், திடீரென தினகரன்  கூட்டணிக்குப் போக மாட்டார் என்று பல்டி அடித்தார் கமல்ஹாசன். தமிழகத்தில் இருப்பதிலேயே மெகா ஊழல் மன்னன் தினகரன் என்று இப்போதுதான் கமல் கண்டுபிடித்தது போன்று பேசினார். அதனால் தனியே நின்றாலும் நிற்பேனே தவிர, தினகரனுடன் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.

திடீரென கமல்ஹாசன் பல்டி அடித்ததற்குக் காரணம் ரஜினி என்று சொல்லப்படுகிறது. தினகரனுடன் கூட்டு சேர்ந்தால் ஊழல் கட்சிகளுக்கு எதிராக கட்சி தொடங்கிய காரணமே அடிபட்டுப் போய்விடும், அதனால் வேண்டவே வேண்டாம் என்று எடுத்துச்சொன்னாராம் ரஜினி.

அதனால் ரஜினி பேச்சைக் கேட்டு தினகரனிடம் இருந்து கமல் வெளியே வந்துவிட்டார். அதற்குப் பாராட்டித்தான் ரஜினிகாந்த் ஓப்பனாக ட்வீட் செய்தாராம். உடனே புல்லரிப்பாகி மீண்டும் ஒரு ட்வீட் போட்டு, ரஜினியின் ஆதரவை பெற முடியுமா என்று காத்திருக்கிறார் கமல்.

இந்த விவகாரத்திற்குள் பெரிய உட்குத்தே இருக்கிறது என்கிறார்கள். தினகரனுடன் கூட்டு சேர்ந்தால், மக்கள் நீதி மையம் குறிப்பிட்ட சதவிகித வாக்கு வாங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இதனால் சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனுக்கு கூடுதல் கிராக்கி ஏற்பட்டுவிடும் என்பதால், அதனை முளையிலே கிள்ளிவிட்டாராம் ரஜினி.

விபரம் புரியாமல் ரஜினி வலையில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறார் கமல். இத்தனை பெரிய நாடாளுமன்றத் தேர்தலில் தனியே நின்று, தொகுதிக்கு ஆயிரம் வாக்குகளாவது வாங்க முடியுமா என்பது சந்தேகம்தான் என்று கமல் கட்சியினர் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.