ஒருபுறம் டாஸ்மாக்குக்கு எதிராக ஸ்டாலின்..! மறுபுறம் மதுபானம் கடத்தில் கலைஞர் டிவி செய்தியாளர்..? நடந்தது என்ன?

சென்னையில் டாஸ்மாக்குக்கு எதிராக திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்திய நிலையில் அவரது கட்சி தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியின் செய்தியாளர் மதுபானம் கடத்தியதாக வெளியான தகவலின் உண்மை நிலை தெரியவந்துள்ளது.


டாஸ்மாக் கடைகள் இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டன. இதற்கு எதிராக திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டின் முன்பு கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினார். மேலும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்டாலின் முழக்கம் எழுப்பினார்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து மதுபானம் கடத்தி வந்த கலைஞர் செய்தி தொலைக்காட்சி நிரூபர் விமல் என்பவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியானது. இது குறித்து விசாரித்த போது செம்மஞ்சேரி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனம் வந்துள்ளது.

அதனை நிறுத்தி விசாரித்த போது அதில் வந்த விமல் என்கிற நபர் தான் கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து அவரது ஆவணங்களை சோதனை செய்த போது அவர் போலி நிரூபர் என்பது தெரியவந்தது. கலைஞர் தொலைக்காட்சி அடையாள அட்டையை போலியாக விமல் தயார் செய்து வைத்திருந்தததும் தெரியவந்தது.

இதனை அடுத்து விமலை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகின. அதில் விமல் கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் என்று குறிப்பிடும் போலி அடையாள அட்டையும் இருந்தது. இந்த போலி அடையாள அட்டையை வைத்து கலைஞர் தொலைக்காட்சி மதுபான கடத்தல் வழக்கில் கைது என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.