கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட சதவீதம் பிடித்தம் செய்யப்பட போவதாக வெளியான அறிவிப்பு அங்கு பணிபுரியும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவை காரணம் காட்டி கலைஞர் டிவி ஊழியர்களுக்கு சம்பள குறைப்பு..! பணம் இல்லையாம்..!
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிவேகமாக நாடு முழுவதும் பரவிவருகிறது. இதனால் கடந்த மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலவிவரும் நெருக்கடியால் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்ததால் மிகுந்த நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த வகையில் பிரபல தனியார் தொலைக்காட்சி ஆன கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் கொரோனா வைரஸ் தொற்றால் பல நிறுவங்களை போல நமது நிறுவனமும் இக்கட்டான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நமது தொலைக்காட்சி குழுமத்தின் துறைத் தலைவர்களின் பரிந்துரையின் பேரில் சில முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி ஒரு குறிப்பிட்ட ஊதியம் வரை பெறும் ஊழியர்களுக்கு சம்பளத்தில் எந்த பிடித்தமும் செய்யப்பட மாட்டாது. ஆனால் நிர்வாகத்தின் உயர்நிலை அதிகாரிகள் மற்றும் அடுத்த கட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் இதுவரை பெற்றுவந்த சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்ய வேண்டிய அவசியம் தற்காலிகமாக எழுந்துள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த கட்டத்தில் இருந்து நாம் மீளும் வரை எந்த வகையான ஆட்குறைப்போ மற்றும் பணிக் குறைப்போ செய்யப்பட மாட்டாது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கலைஞர் டிவியின் இந்த சம்பள குறைப்பு அறிவிப்பு அந்த தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது