நகைக் கடன்கள் திடீரென வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு..

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வரும் அனைத்து வகையான நகைக் கடன்களும் திடீரென முன்னறிவிப்பு ஏதுமின்றி வாய்மொழி உத்தரவு மூலம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு எதிர்க்குரல் கொடுத்துவருகின்றன.


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ‘கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது சாதாரண ஏழை, நடுத்தர மக்களுடைய நெருக்கடியை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதனால் தனியார் வட்டி கடைகள் மற்றும் கந்துவட்டி பேர்வழிகளிடம் இவர்கள் அனைவரும் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக பெ.சண்முகம், ‘மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் பருவமழை பெய்து விவசாய பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வேளாண் பணிகளை மேற்கொள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பணம் தேவைப்படும் இக்காலத்தில் நகைக்கடன் வழங்குவது தடை செய்யப்பட்டிருப்பதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

தமிழக அரசின் இந்த செயல் விவசாயிகளை கந்துவட்டிகாரர்களிடமும், தனியார் அடகு கடைக்காரர்களிடமும் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்குவதற்கு இட்டுச் செல்லும் என்பதை நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் உணர வேண்டும். அதிலும், கடந்த நான்கு மாத காலமாக பொதுமுடக்கம் காரணமாக பெரும் சிரமத்திலிருக்கும் விவசாயிகளை மேலும் துன்பத்திற்குள்ளாக்குவதுடன், விவசாயத்தை முடக்கும் செயல் இது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே, கூட்டுறவு வங்கிகளில் வழக்கம் போல் பயிர்க்கடன், விவசாய நகைக்கடன் வழங்கவும் கடன் கோரும் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைக்கவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.