தேசிய பாதுகாப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஆறு எதிர்ப்பு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு அலறும் இஸ்லாமியர்கள்! இன்னும் என்னென்ன கொடுமை நடக்கப்போகுதோ?

அதில் நான்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள். நமது தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரிக்கவும் செய்யாமல், எதிர்க்கவும் செய்யாமல் அமைதியாக வெளியேறி விட்டார்கள். இந்த சட்டம் நிறைவேறியது குறித்து இஸ்லாம் மக்கள்தான் அதிகம் பயந்துபோயிருக்கிறார்கள். அவர்களுடைய பாதுகாப்பு முக்கியம் என்று இஸ்லாமியர்களிடையே சுற்றிவரும் கருத்து இதுதான்.
சில தினங்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த பதினான்குபேரைப் புதுடெல்லி விமான நிலையத்தில் கைது செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே கோவையிலும் மதுரையிலும் இவ்வாறான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாம் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஜஹ்ரான் என்றொரு மாபாவி உலக முஸ்லிம் சமூகத்திற்கு இழைத்திருக்கும் துயரம் நம் வாய்களைக் கட்டிப்போட்டுவிட்டது.
இனியும் இதுபோல எக்கச்சக்கமான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்; சந்தேகம் வேண்டாம். இப்போதைக்கு நாம் செய்யக் கூடிய சில வேலைகள் உள்ளன. பெற்றோர்க்கும் அந்தந்த ஊர் ஜமாத் நிர்வாகங்களுக்குமான வேலைகள்.
தங்களின் மகன், மகள்களோ அல்லது ஒரு ஜமாத்திற்கு உட்பட்ட இளைஞர்களோ (ஆண், பெண் இருபாலரும்) என்னமாதிரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்று கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் தம் கல்வியிலோ பணிகளிலோ மட்டுமே இருக்கிறார்களா என்று கண்காணித்துவருவது நல்லது. நாம் சும்மா முகநூல் தொடர்பில் இருந்தாலேயே அமித்ஷா அரசு கொதிக்கும்; இதில் சற்றே உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிள்ளைகள் எழுதினால்கூட அது ஆபத்தில் கொண்டே சேர்க்கும்.
பெற்றோர்களும் அவ்வவ் ஜமாத்தினரும் தங்கள் தரப்பு இளைய சமுதாயத்திற்குத் தக்கவிதமான பாதுகாப்பை வழங்க முன்வர வேண்டும். அவர்களுக்கான மார்க்க போதனைகள் சமூக உறவை மேம்படுத்தும் வண்ணமாக ஊட்டப்பட வேண்டும். “அவன் ஒரு சாக்லேட் தந்தானே, அதைச் சாப்பிடலாமா,” என்ற மூளைக்கும் காலத்திற்கும் விரயமான கேள்விகளில் சமூகம் மூழ்கித் தொலையக் கூடாது. அதுபோலவே தன் முன்னே ஒரு மைக் இருக்கின்றது என்பதற்காகக் காலப்பொருத்தமற்ற, உலக நடைமுறையில் இல்லாத விஷயங்களையெல்லாம் பேசி இளைய சமுதாயத்தை உசுப்பேற்றிக்கொண்டிருக்கவும் கூடாது.
பொருத்தமான விஷயங்களைப் பேசி உலகத்தோடு ஒட்ட ஒழுகிச் செல்வதே நமக்குள்ள பணி ஆகும். மீறி என்.ஐ.ஏ. அதிகாரம் நம் இளைஞர்களைத் தேவையற்ற வழக்குகளில் சிக்கவைக்க முயன்றால் ஊர் ஜமாத்தினர் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களோடு இணைந்து இளையவர்களை வெளிக்கொண்டுவரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும்.
“இது அடுத்த வீட்டு விஷயம், நாம் நம் பிள்ளையைச் சரியாகக் கவனித்துக்கொள்வோம்,” என்று கோழிக்கூண்டு வாழ்க்கையில் இருந்துவிடலாகாது. ஒருவனுக்கு வரும் சோதனை நம் சமூகம் அனைத்திற்கும் வரும் சோதனை என்ற மனப்பாங்கை அனைவருமே கொள்ள வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தை மனத்தளவில் ஊனப்படுத்த ஃபாஸிஸ அரசு மோசடித்தனமான சூழல்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது. இதில் நாம் வேறு, அவர் வேறு என்றெல்லாம் கட்சி கட்ட வேண்டாம்.