ரஜினிகாந்த் வந்துட்டார் சரி. அர்ஜூன் மூர்த்தி யாருங்க..? ரஜினி மன்றத்து ஆளுங்களுக்கு இடமே இல்லையா..?

தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான். தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்து விட்டது. தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி. என் உயிரே போனாலும் மக்களே முக்கியம் என ஒருவழியாக தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டார் ரஜினிகாந்த்.


தற்போது ரஜினியின் அரசியல் கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும் நியமனம் செய்துள்ளார். யார் இந்த அர்ஜூன மூர்த்தி என்பதுதான் ரஜினி ரசிகர்களின் கேள்வி. 

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அர்ஜுனமூர்த்தி நீண்டகாலமாக முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்துவந்தார். அவரின் நெருங்கிய நட்பு வட்டத்திலும் இருந்துவந்திருக்கிறார். முரசொலி மாறனின் மறைவுக்குப் பின்னர், தி.மு.க-விலிருந்து விலகிய இவர், தன்னை பா.ஜ.க-வில் இணைத்துக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் மீது அதிக பற்றுக்கொண்ட இவர், முதலில் பா.ஜ.க-வின் வர்த்தகப் பிரிவில் பதவி வகித்துவந்தவர்.

பா.ஜ.க-வின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்துவந்தார். இந்தநிலையில், ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜுனமூர்த்தி, பா.ஜ.க-வின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்வதாகக் கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்திருக்கிறார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அர்ஜுனமூர்த்தி நீக்கப்படுவதாகவும் பா.ஜ.க சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

இவரின் மனைவி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பள்ளித் தோழி. டெல்லி, தமிழக பா.ஜ.க தலைமையுடன் நெருக்கமாக இருந்த இவர், பல்வேறு தொழில்களையும் நடத்திவருகிறார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த்தின் டுவிட்டர் பக்கம் உட்பட அவரின் அனைத்து தொழில்நுட்பப் பிரிவுகளையும் அர்ஜுனமூர்த்தியின் குழுதான் கவனித்துவருகிறது. எல்லாம் சரிதான். ஒரே ஒரு ரஜினி மன்ற நிர்வாகிக்குக்கூட ரஜினி கட்சியில் இடம் இல்லை என்பதுதான் வேதனை.