தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா? கொதிக்கும் வீரமணி

தமிழ்நாட்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லையா? ஹிந்தி மாநிலங்களில் ஹிந்திக்கு இடமில்லை என்றால் ஏற்பார்களா? மொழி உரிமையைக் காக்க தமிழக அரசு முன்வரட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அரசமைப்புச் சட்டத்தை எழுதிய சட்ட கர்த்தாக்களும், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களும் ஆழமாக விவாதித்தே பன் மதம், பன் மொழி, பல கலாச்சாரம், பல்வகை நாகரிகம், உணவு மற்றும் பழக்கவழக்கங்களின் பன்முகத்தன்மையை மனதிற்கொண்டே கல்வியை மாநிலப் பட்டியலில் வைத்தார்கள். கல்வியை ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்

1976 இல் (நெருக்கடி நிலை காலத்தில்) வெளிச்சத்திற்கு வராமலேயே, கல்வியை ஒத்திசைவுப் பட்டியல் என்ற கன்கரண்ட் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். அது இன்றுவரை தொடருவதோடு, மத்தியில் ஆளும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சியில் - அறிவிப்பும், ஆணையும், திருத்தமும் செய்யப்படாமலேயே - கல்வி (மத்திய அரசு பட்டியலில்) கொண்டு செல்லப்பட்ட கொடுமை ஏற்பட்டுள்ளது!

பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களின் தாய்மொழி- ஆட்சி மொழி - தமிழ்!

‘‘ஒட்டகம் கூடாரத்துக்குள் நுழைவதுபோல’’ தமிழ்நாட்டில் நுழைந்த மத்திய கல்வி போர்டின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தமிழ்நாட்டில் நுழைந்து - தமிழ் மண்ணில் நிலைப்பட்டுள்ள நிலையில், சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளுக்கு மட்டுமே அப்பள்ளிகளில் அதிமுக்கியத்துவம் தருவதோடு, தமிழ்ப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்குரிய வசதியைச் செய்து தராமல் கைவிரிப்பது நியாயந்தானா? இது ‘‘தமிழ்நாடு’’ என்ற நினைப்பே மறந்துவிட்டதா? சமஸ்கிருதம் போல் 130 கோடி மக்களில் 26,000 பேர் பேசும் மொழியா தமிழ்?

உலகம் முழுவதும் உள்ள பற்பல நாடுகளிலும் 10 கோடி மக்களது தாய்மொழியாக, ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறையில் உள்ள மொழி செம்மொழி நம் தமிழ் மொழி அல்லவா? இதற்கு வாய்ப்புக் கதவுகளை மூடுவது அதுவும் தமிழ் மண்ணிலேயே என்றால், நம் ரத்தம் கொதிக்கவில்லையா?

1938-லேயே ஹிந்தியை ஆச்சாரியார் ஆட்சி கட்டாய பாடமாக்கிய நேரத்தில், ‘‘தமிழ் வாழ்க, ஹிந்தி ஒழிக’’ என்ற குரல் கொடுத்த 10 ஆயிரம் பேர் (கர்ப்பிணித் தாய்மார்கள் உள்பட) சிறைக்குப் போய் தண்டனை அனுபவித்து, இன்று தமிழ்நாட்டு அரசின் கொள்கைத் திட்டமாக 50 ஆண்டுகளாக தமிழ், ஆங்கிலம் - இருமொழிக் கொள்கை ஆட்சியில் செயல்பட்டு வரும் மண்ணில், ‘‘பிச்சைக்கு நுழைந்தவர், சிம்மாசனத்தில் அமர்ந்து வீட்டுக்காரரையே வெளியே தள்ளும் கொடுமை’’போல, தமிழுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கூடங்களில் இடம் இல்லை என்று கூறுவது கொடுமையிலும் கொடுமையல்லவா?

திராவிடர் ஆட்சி 1967 இல் ஏற்படுவதற்கும் மூல காரணம் மொழிப் போராட்டம் அல்லவா? அதை மத்திய ஆட்சியாளர்கள் மறந்துவிடலாமா?தமிழ்நாட்டுத் தமிழர்கள் - திராவிடர்கள் - இன உணர்வுடனும் தங்களது தனி அடையாளத்தை இழந்துவிடக் கூடாதவர்களாகவும் இருக்கவேண்டாமா? ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்திக்கு இடமில்லை என்றால் பொறுத்துக் கொள்வார்களா?

தமிழ்நாடு அரசின் அனுமதி பெற்றுதான் மத்திய கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்த முடியும் என்று இருந்த ‘தடையில்லா சான்றினை’ கூட மத்திய அரசு நீதிமன்றம்மூலம் நீக்கியதன் விளைவு, தமிழுக்கே கதவடைக்கும் கொடுமை அதுவும் தமிழ் மண்ணிலேயே நீடிக்கும் கொடுமை இருக்கிறது. உத்தரப்பிரதேசத்துப் பள்ளிகளில் ஹிந்திக்கு இடமில்லை என்றால், அவர்கள் பொறுத்துக் கொள்வார்களா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கி.வீரமணி.