கமல்ஹாசன் இப்பவே இப்படின்னா..? மற்ற கட்சிக்கும் கமல் கட்சிக்கும் வித்தியாசமே கிடையாதா..?

திராவிடக் கட்சிகளின் பாணியில்பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து பிரபல பதிவர் சாவித்திரி கண்ணன் போட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.


சசிகலா ஜெயிலில் இருந்து வந்தபோது அவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பை நினைவுபடுத்துவது போல, கமல்ஹாசனுக்கு வழி நெடுக பேனர்கள், கட் அவுட்கள்..செண்டை மேளம்,பறை இசை,ஆட்டம்பாட்டம், வாழ்க கோஷம், பூங்கொத்துகள்.. மலர் தூவல்கள் என எதற்கு இத்தனை ஆர்ப்பரிப்பு! தன் கட்சியின் பொதுக்குழுவிற்கு அதன் தலைவர் வருவதே ஒரு அதிசய நிகழ்வா?

இதில் நடந்துள்ள கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல, ஏற்கனவே கமலஹாசன் ஒற்றைத் தலைமை, ஒற்றை அதிகாரம் என்பதோடு இரண்டாம் கட்ட தலைவர்களாகக் கூட யாரும் மேலெழுந்துவிடாத வண்ணம் தான் கட்சி நடத்தி வருகிறார்! இது போதாதென்று கமல்ஹாசனை நிரந்தரத் தலைவராக அறிவித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த கமல்ஹாசனுக்கு முழு அதிகாரமும், முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசனை தேர்வு செய்தும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!

 அதாவது எல்லாரும் வெறும் டம்மியாக இருக்க வேண்டும் நானே எல்லாம் என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ஒரு பொதுக்குழுவை கமலஹாசன் கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார்!

அத்துடன் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்து ஒரு தீர்மானமாம்..! மூன்றே முக்கால் சதவிகித ஓட்டு மட்டுமே பெற முடிந்த நிலையில் இப்படி ஒரு தீர்மானம்! அரசியல் அறிவோ, அனுபவமோ, பயிற்சியோ.. சிறிது மற்ற ஒரு நபருக்கு எடுத்த எடுப்பில் முதலமைச்சர் ஆசை வேறு!

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் பல தீர்மானங்கள் கமலஹாசனை பாராட்டி உள்ளன! உதாரணத்திற்கு கமல்ஹாசன் டார்ச் லைட் சின்னத்தை மீண்டும் பெற்றதற்கு அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்படும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெரும்பாலானவை வழக்கமாக கமல்ஹாசன் நடத்திய கூட்டங்களில் சமீப காலங்களில் வாக்குறுதிகளாக அறிவித்தவைகள் மற்றும் ட்விட்டரில் அவர் வெளியிட்ட கருத்துகளே தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கும் போது, இந்த தீர்மானங்களைக் கூட அவர் மற்றவர்களுடன் கலந்து பேசி உருவாக்கவில்லை என தெரிய வருகிறது!

இந்தியாவையே உலுக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு காரணமான மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எந்த தீர்மானமும் ம.நீ.ம பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! கமலஹாசனுக்கு அம்பானியுடன் நெருங்கிய நட்பு உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்! அத்துடன் வேளாண் சட்டங்களை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் தான் தன்னுடைய பாஜக ஆதரவு அம்பலப்பட்டுவிடும் என அமைதி காத்துவிட்டதாகத் தெரிகிறது!

அதே போல தொழிலாளர் சட்டங்களை திருத்தி எட்டு மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரித்திருப்பது, தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்பட்டிருப்பது குறித்தும் மக்கள் நீதி மய்யம் மூச்சுவிடவில்லை!

பொதுத்துறை நிறுவனங்களை பாஜக அரசு வேகவேகமாக தனியார்மயப்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் இல்லை. ஆக,மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி தானே! சமூகத்தை பாதிக்கும் ஒரு பேரழிவை எதிர்க்க மறுப்பதை வேறு எவ்வாறு புரிந்து கொள்வது..?

 ஏழு தமிழர் விடுதலை, இந்தி சமஸ்கிருத திணிப்பு, தமிழக நிதி நிலை அறிக்கை வெள்ளை அறிக்கை, ஜெயலலிதா மரணம் விசாரணை, தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிவு, திராவிடக்கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுப்பது,( அப்ப பாஜக பணம் கொடுத்தால் பரவாயில்லையா? திராவிடக் கட்சி தருவதை மட்டும் எதிர்ப்பது எந்த ஊர் நியாயம்?) மது நோயாளிகள் அதிகரிப்பு குறித்த அக்கரை, யானைகள் உயிரிழப்பு, கிராமசபைகள் கூட்டப்படாதது, மீனவர் பிரச்சினை, பொள்ளாச்சி சம்பவம், இராணுவ வீரர்களுக்கு பாராட்டு, மருத்துவர்கள் புறக்கணிக்கப்படுவது.. குறித்த தீர்மானம் போன்றவை கவனிக்கத்தக்கவையாகும்!

உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்காரகள் போட்டியிடக் கூடாது என்று தடுத்து உள்ளாட்சி கடமைகள் செய்ய முன்வந்த கட்சியினரை தடுத்த கமலஹாசன், தற்போது கிராம சபைகள் கூட்டப்படாதது குறித்து கண்டணம் நிறைவேற்றுவதற்கான தார்மீகத் தகுதி தனக்கு இருக்கா என்று யோசிக்க வேண்டும்!

இல்லத்தரசிகளுக்கு அரசே சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றிய கமலஹாசன் வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வேண்டும் என கேட்கவில்லை!

இப்படியாக தான் பாஜக ஆதரவாளர், தற்புகழ்ச்சியை விரும்புபவர், மற்றும் சர்வாதிகாரி என்பதை கமலஹாசன் பட்டவர்த்தனமாக தன் கட்சியின் முதல் பொதுக் குழு கூட்டத்திலேயே நிரூபித்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.