பிரதம மந்திரி விவசாயிகள் நிவாரண திட்டத்தில் 300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதா..? அதிர்ச்சி தரும் விவசாயிகள்.!

பிஎம் கிசான் எனப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தில் 300 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, அகில இந்திய விவசாயிகள் மகாசபை, AIKM அனைத்திந்திய விவசாய & கிராமப்புற தொழிலாளர் சங்கம், AIARLA – தமிழ்நாடு போன்றவை கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ.6000 நிவாரணம் வழங்கும் மத்திய அரசாங்கத் திட்டத்தில், தமிழகத்தில் சுமார் 10 மாவட்டங்களில் 5.25 இலட்சம் போலி வங்கி கணக்குகளுக்கு ரூ.110 கோடி வரை பணம் அனுப்பப்பட்டு மோசடி நடந்திருக்கிறது எனவும், வேளாண்துறை அதிகாரிகள், தற்காலிக பணியாளர்கள், தனியார் கனிணி மையம் நடத்துபவர்கள் என சுமார் 100 பேர் வரை கைது செய்திருப்பதாகவும், தமிழக அரசின் வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்; இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் உறுதி செய்துள்ளார். 

டிசம்பர் 2018 ல் துவங்கிய இத் திட்டத்தில் பதிவு செய்த 41 இலட்சம் உண்மையான சிறு குறு விவசாயிகளில் பலருக்கும் நிவாரணம் வழங்கப்படவில்லை; அதே போல், கோவில்-மடங்கள் நிலங்களில் பயிர் செய்யும் சுமார் 1.50 இலட்சம் குத்தகை விவசாயிகளுக்கு நிவாரணம் பெற உரிமை இல்லை என மறுக்கப்பட்டு விட்டது. 

ஆனால், இதுவரை 5.25 இலட்சம் போலிகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளனர்; அவர்களிடமிருந்து பணமும் வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆழமான விசாரணை நடத்தப்பட்டால் இந்த எண்ணிக்கை உயரும் எனவும் தெரிகிறது. தமிழக அரசாங்கம் 110 கோடி ரூபாய் முறைகேடு எனத் தெரிவித்தாலும், 5 இலட்சம் பேருக்கு பட்டுவாடா செய்யப்பட்ட தொகை ரூ.300 கோடியாகும். 

தமிழக அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள, சிபி சிஐடி விசாரணை என்பது எல்லாம் கண் துடைப்பு நடவடிக்கையே ஆகும். அதன் மூலம் முழு தொகையும் மீட்கப்பட முடியாது ; அனைத்து உண்மைகளும், வெளிவராது. 

பயன் பெற விரும்பும் விவசாயிகளைப் பதிவு செய்வதற்கான மத்திய அரசின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டது தான் 5 இலட்சம் போலிகள் திடீரென அதிகரிக்க காரணம் எனவும், பதிவு செய்வதற்கான கடவு சொல்லை Password தெரிந்து கொண்ட தனியார் கனிணி மையம் நடத்துபவர்கள்/ இடைத்தரகர்கள் தான் ஊழலுக்கு காரணம் என முதலமைச்சர் கூறுகிறார்.

பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளிகள், ஆதார், பட்டா சிட்டா போன்ற அடிப்படை ஆவணங்களின் நகல்களைச் சான்றாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாததால், வேறு வேறு மாவட்ட, மாநிலத்தில் உள்ள யாரோ ஒருவருடைய நில ஆவணங்களின் எண்களை ஆன்லைன் பதிவுக்கு பயன்படுத்தப் பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. 

இதனால், தமிழக அரசாங்கம், தங்களுக்கு தொடர்பு இல்லை என இப் பிரச்சினையை திசைத் திருப்ப முயற்சிக்கிறது. இது உண்மை அல்ல. பல்லாயிரக் கணக்கான ரூபாய்க்கு கடவுச் சொல் விவரங்கள் கீழ் மட்டத்தில் விற்கப்பட்டுள்ளன. கடவுச் சொல் தெரிந்து கொண்ட ஆன்லைன் பதிவு செய்கிற மையங்கள்/ ஆளுங் கட்சி ஆதரவு இடைத் தரகர்கள் மூலமாக ஊராட்சி ஒன்றிய/பிளாக் மட்டத்தில், போலிப் பயனாளிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

பிளாக் மட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்பட்டாலும் கூட, மாவட்டம், மாநிலம் ஆகிய மட்டங்களில் வேளாண்மை துறை அலுவலகங்கள் மூலமாகவே இந்த விண்ணப்பங்கள் முழுமையாக ஏற்கப்பட வேண்டும்; மாவட்ட அலுவலக ஒப்புதல் இருந்தால் தான் நிதி வழங்குவதற்கான தகுதியை அந்த விண்ணப்பதாரர்கள் பெறுவர். அதற்காக யார், எதற்காகப் பணியாற்றினார்கள் ?

ஆன்லைன் பதிவு செய்த இடைத்தரகர்கள் / கனிணி சேவை மையங்களை மட்டுமே குற்றம் சாட்ட முடியுமா? ஊராட்சி ஒன்றிய மட்டத்திலும், அதற்கடுத்த மட்டங்களிலும், ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் கூட்டு இல்லாமல், இத்தகையதொரு மெகா ஊழல் நடைபெற வாய்ப்பே இல்லை. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசாங்கம், இந்த ஊழலில் தனது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.