தொழில்துறை வளர்ச்சி விகிதம் 0% மட்டும்தானா..? அதிர்ச்சியில் இந்தியா

இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (GDP) விகிதத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியம், உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி குறித்த விவரங்களை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.


இதன்படி கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக உள்கட்டுமானத்துறை உற்பத்தி வளர்ச்சியில் 6.5 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும். கொரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் நுகர்வோர் தேவை குறைந்ததன் காரணமாக உற்பத்தி விகிதத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும். மார்ச் மாத கடைசி வார கணக்கீட்டின்படி தொழில் துறை உற்பத்தி முற்றிலும் முடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் தரவுகளின் படி உள்கட்டுமானத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் உற்பத்தி 24.7 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இயற்கை எரிவாயு உற்பத்தி 15.2 சதவீதமும், எஃகு உற்பத்தி 13 சதவீதமும், உரம் உற்பத்தி 11.9 சதவீதமும், மின்சார உற்பத்தி 7.2 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 5.5 சதவீதமும், சுத்திகரிப்புப் பொருட்கள் உற்பத்தி 0.5 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலமை விபரீதமாக போவதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பொருளாதார அமைச்ச அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக வீடியோ கான்பரன்ஸ் சந்திப்புகளை நடத்தி வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் முக்கிய பொருளாதார மண்டலங்கள் (MSME) எனப்படும் மைக்ரோ நிதி, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் நடத்தியிருப்பதாக அறிய முடிகிறது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள இந்த நிலையில் நாட்டில் உள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்களின் விற்பனை, விமானம் மற்றும் இரயில் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை சிவில் விமான போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளார் பிரதமர். இந்த நிலையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் நாட்டில் சிறு வணிகங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவது தொடர்பாக வணிகம் மற்றும் எம்எஸ்எம்இ அமைச்சக அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை விரிவான கலந்துரையாடல் செய்தது கவனிக்கத்தக்கது. 

இதன் எதிரொலியாக இன்று சனிக்கிழமை முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிப்பதாக இருந்த மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் பற்றிய தகவல்களை வெளியிடுவதை நிதி அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015-16ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நெருக்கடியில் இந்த வளர்ச்சி விகிதம் 0 புள்ளிகளுக்கும் குறைவாக இருக்கும் என்று கணித்துள்ளன தரக்குறியீட்டு நிறுவனங்கள்.

மணியன் கலியமூர்த்தி