ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான அறுதிப் பெரும்பான்மை பாஜகவுக்கும் கிடைக்கவில்லை, காங்கிரசுக்கும் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 90 இடங்களில் 40 இடங்களில் பாஜகவும், 31 இடங்களில் காங்கிரசும் வென்றுள்ளன.
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்எல்ஏதான் பாஜகவை ரட்சிக்கப் போகிறவரா?

ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் சவுதாலா தொடங்கிய புதுக்கட்சி 10 இடங்களில் வென்றுள்ளது. ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பழைய கட்சியான ஐஎன்எல்டி 1 ஒரு தொகுதியிலும், ஹரியானா லோஹித் கட்சி 1 தொகுதியிலும் வென்றுள்ளன. அதிருப்தியால் பாஜகவில் இருந்து விலகிப் போட்டியிட்ட 4 பேர் உள்பட மொத்தம் 7 சுயேச்சைகளும் வென்றுள்ளன.
ஹரியானாவில் ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 6 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் சுயேச்சைகளை பயன்படுத்திக் கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது. இந்த 7 சுயேச்சைகளுக்கும் பாலமாக இருந்து புரோக்கர் வேலை பார்ப்பவர் ஹரியானா லோகித் கட்சியின் தலைவரும், அதன் ஒரே எம்எல்ஏவுமான கோபால் கண்டா.
7 சுயேச்சைகளையும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கவும் வைத்துவிட்டார். இந்த விவகாரத்தை வைத்தே, எதிர்க்கட்சிகளும் நெட்டிசன்களும் பாஜகவை வறுத்தெடுத்து வருகின்றன. ஏனெனில் கோபால் கண்டா பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்.
அவரது எம்டிஆர்எல் ஏர்லைன்சில் வேலைபார்த்த ஏர்ஹோஸ்டஸ் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு கோபால் கண்டாவில் பாலியல் துன்புறுத்தலே காரணம் என எழுதிவைத்துவிட்டு தூக்கில் தொங்கிவிட்டார்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாகிய கோபால் கண்டா பின்னர் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஏர்ஹோஸ்டஸ் பெண்ணின் தாயாரும் தற்கொலை செய்துகொண்டார். அதற்கும் கண்டாவின் துன்புறுத்தலே காரணம் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லை என பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் இருந்து டெல்லி உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கண்டா, சிர்சா தொகுதியில் போட்டியிட்டு அறுநூற்றி சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்எல்ஏவும் ஆகிவிட்டார். இவர் மூலமே 7 சுயேச்சை எம்எல்ஏக்களையும் பாஜக டீல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது
அதிகாரப்பசியில் கண்டா போன்றவர்களை பாஜக பயன்படுத்திக் கொள்வதாக காங்கிரஸ், இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏன் பாஜகவை சேர்ந்த உமா பாரதியே, கண்டாவின் துணையை நாடுவதோ அவரை சேர்த்துக் கொள்வதோ கூடாது என எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட எம்எல்ஏதான் பாஜகவை ரட்சிக்கப் போகிறவரா? என நெட்டிசன்களும் வறுத்தெடுத்து வருகின்றனர்.