சட்டப்பேரவை தொடங்கப்போவுது, ஸ்டாலினுக்கு சட்டை ரெடியா..?

2020ம் ஆண்டுக்கான தமிழக தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், நாளை திங்கட்கிழமை அதாவது 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.. அந்த வகையில் இது, 15-வது சட்டப்பேரவையின் 8வது கூட்டம்.


இந்த முதல் கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உரை நிகழ்த்தி தொடங்கிவைப்பார். அதன்பின், ஆளுநரின் ஆங்கில உரையை பேரவைத் தலைவர் பி.தனபால் தமிழில் வழங்குவார். இந்த நிகழ்வுகளுடன் முதல் நாள் கூட்டம் நிறைவு பெறும். 

அதன்பிறகு அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் சபாநாயகர், முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து இதில் முடிவெடுக்கப்படும். 

அடுத்து பொங்கல் பண்டிகை வர இருப்பதால், இந்த ஒரு வாரம் மட்டுமே சட்டப்பேரவை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தை அ.தி.மு.க.வை விட தி.மு.க.வினர் அதிக ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஸ்டாலின் தனிமனித மசோதா ஒன்றை கொண்டுவர இருக்கிறார். பொதுவாக பேரவை கூடுவதற்கு 15 நாட்கள் முன்னதாகவே இந்த தீர்மானத்தைக் கொடுக்க வேண்டும். தாமதமாக தீர்மானம் கொடுக்கப்பட்டதால், அது எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை.

ஆனால், அந்த தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் என்று தி.மு.க.வினர் வலியுறுத்துவார்கள். மேலும் சட்டமன்றத்தில் புயல் கிளப்பும் வகையில், சட்டம் ஒழுங்கு பாதிப்பு பற்றிய பல்வேறு விஷயங்களை வைத்து பிரச்னையைக் கிளப்புவார்கள்.

தி.மு.க. என்ன செய்தாலும் பதிலடி கொடுப்பதற்கு அ.தி.மு.க தயாராகவே உள்ளது. அதனால் மீண்டும் சட்டமன்றத்தில் தகராறு, சட்டை கிழிப்பு போன்றவை நடக்க வாய்பு உள்ளது. கூடுதலாக ஸ்டாலினுக்கு ரெண்டு சட்டை பார்சல்.