நடுரோட்டில் கொடிக்கம்பம் வைப்பது தவறு இல்லையா? முதல்வர் எடப்பாடியின் திகில் பதில்!

கோவையில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்து அனிதாவுக்கு கால்கள் முறிந்துபோனது குறித்து இன்று சேலத்தில் முதல்வர் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.


அப்போது, ‘கொடிக்கம்பம் வைக்கக்கூடாதுன்னு சட்டத்தில் சொல்லவில்லையே, எனக்குத் தெரிந்து கொடிக்ககம்பங்களுக்கு தடை இல்லை’ என்று சமாளித்தாரே தவிர, அப்படி கொடிக்கம்பங்கள் வைத்தது தவறு என்றோ அல்லது கால் இழந்தவருக்கு அனுதாபமோ தெரிவிக்கவில்லை என்பதுதான் பரிதாபம்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோவை சிந்தாநல்லூர் பகுதியைச் சேர்ந்த அனுராதா என்பவர் நேற்றுக் காலை பணிக்குச் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அ.தி.மு.க. விளம்பரக் கொடிக்கம்பம் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அதேநேரத்தில் அங்கு ஒரு லாரியும் வந்துள்ளது. இதையடுத்து அனுராதா மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அனுராதாவின் இரு கால்களும் முறிந்து படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஏற்கனவே அ.தி.மு.க.வினரின் பேனரால் சென்னை குரோம்பேட்டைச் சேர்ந்த இளம் பொறியாளர் சுபஸ்ரீ மீது பேனர் விழுந்ததில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்ததை சுட்டிக்காட்டி உயர்நீதிமன்றம் எச்சரித்ததும், கண்டித்ததும் நாடறியும். இதுபோன்ற பேனர், விளம்பர கொடிக்கம்பங்களை வைக்கமாட்டோம் என உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. உறுதியளித்ததையும் அறிவோம்.

ஆனால் அடுத்தடுத்து விளம்பர மோகத்தால் ஆளும் கட்சியே நீதிமன்ற வழிகாட்டுதலை மீறுவது கண்டனத்திற்குரியது. படுகாயம் அடைந்துள்ள அனுராதாவுக்கு உரிய உயர் சிகிச்சைகள் அளிக்க வேண்டும். அத்துடன் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்