அப்பாவி மக்களை காவல்துறை தாக்குவது நியாயம்தானா..? பதில் சொல்லுமா அரசு..?

வெளியே சென்றால் கொரோனா தாக்குதல் ஏற்படும் என்ற பீதியை விட காவல்துறையினரின் தாக்குதலை சமாளிக்க முடியவில்லை என்ற கடுப்புடன் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர் தமிழக மக்கள்.


கடந்த 22ம் தேதி முதல் வருகின்ற ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனையைத் தவிர வணிக நோக்கில் உள்ள எந்த நிறுவனங்களுக்கு செயல்படக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது. 

தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்களை காவல்துறையினர் கண்டபடி அடிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஒரு தரப்பினர் இதை காமெடியாக நினைத்து பகிர்ந்தாலும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் படி பார்த்தால் கடுமையாக ஆட்சேபிக்கின்ற அளவிற்கு தமிழக காவல்துறையிர் நடந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இந்த வீடியோக்களைப் பகிர்ந்து இன்று சிரிப்பவர்கள் நாளை அடி வாங்கும் போது தான் அவர்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதை அறிவார்கள் என்று வருத்தம் கொள்கின்றனர் இதில் பாதிக்கப்பட்டவர்கள்.

சமீபத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் டாக்டர் ஒருவரை காவல்துறையினர் அடிப்பதையும் . பிறகு அவர் நான் டாக்டர் என்றவுடன் . அதை முன்னாடியே சொல்லக் கூடாதா என்று இவர் பதில் அளிப்பதையும்.

மேலும் காவல்துறையினரிடம் கேள்வி கேட்ட இளைஞரை லாக்கப்பில் வைத்து அடித்த வீடியோவை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பி மக்களிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது காவல்துறை.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் கடைகள் திறந்திருக்க வேண்டும் என உத்தரவிட்ட அரசுக்கு. அதை வாங்க மக்கள் வெளியே வந்து தான் ஆக வேண்டும் என்று தெரியாதா என்று குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

பேராவூரணி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் உதயகுமார் என்பவர் வீடின்றி சாலையில் உள்ளவர்களுக்கு உணவளிக்கச் சென்றபோது அவரை மிரட்டி கைது செய்த காவல்துறையினரின் இந்த கெடுபிடிகளைக் கண்டு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

இதற்கிடையே தமிழக காவல்துறையின் இந்த அராஜக போக்கை கண்டித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமீபத்தில் மக்களிடையே மிக வேகமாக பரவி வருகிறது.

இன்னும் ஒரு ஆண்டில் தமிழக சட்டபேரவை தேர்தல் வர உள்ள இந்த நிலையில். பொது மக்கள் மீது காவல்துறையினர் நடத்தி வரும் இந்த தாக்குதல் சம்பவங்கள் ஆளும் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தியை உருவாக்கி வருகிறது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது.