12-ஆம் வகுப்பு ஆங்கில பாட புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருத மொழி தொன்மையானது என்று அச்சிடப்பட்ட கருத்தால் தமிழறிஞர்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
செம்மொழியாம் செந்தமிழிழை விட சமஸ்கிருதம் மூத்த மொழியாம்! வரலாற்றை திரிக்கும் எடப்பாடி அரசு!

தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறுகள் இடம்பெற்றுள்ள செய்தியானது பல தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர், அய்யாவை வைகுண்ட சுவாமி ஆகியோரின் வாழ்க்கையும் கருத்துக்களும் சில பாடப்புத்தகங்களில் தவறாக கூறப்பட்டிருந்தது. பல சமூகத்தினர் இதற்கு எதிராக போராடிய பிறகு இறுதியில் அவை நீக்கப்பட்டன. இந்நிலையில் மேலும் ஒரு புது சர்ச்சை கிளம்பியுள்ளது.
அதாவது 12-ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் 142-ஆம் பக்கத்தில் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகள் அச்சிடப்பட்டிருந்தன. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், ஹெப்ரூ ஆகிய மொழிகள் இடம்பெற்றிருந்தன. அதில் தமிழைவிட சமஸ்கிருதம் முதன்மையானது என்று அச்சிடப்பட்டிருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்மொழி தோன்றியதாகவும், 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சமஸ்கிருதம் தோன்றியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழியே தொன்மையானது என்பது வரலாறு அறிந்ததே.
இதனை கண்ட பல்வேறு தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆசிரியர்களும் திகைப்பில் உள்ளனர். இந்த கருத்தினை மாற்றுமாறு பல்வேறு இடங்களில் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.