அரசு பள்ளியில் படித்த ஜீவித் குமார் நீட் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைக் கொண்டாடும் பலரும், அவர் அரசு பள்ளியில் படித்து வெற்றி அடைந்திருக்கிறார் என்று பெருமை கொள்கிறார்கள். ஆனால், இந்த வெற்றி குறித்து பூ.கொ.சரவணனின் பார்வை இது.
ஜீவித்குமாரின் நீட் வெற்றி உண்மையான அரசு பள்ளி மாணவரின் வெற்றியா?
குடிமைப்பணித் தேர்வில் முதலிடத்தை பட்டியலினத்தைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்கள் பெறுகிற போது கொண்டாடித் தீர்ப்போம். அது நிச்சயம் கொண்டாட்டத்திற்கு உரியது. ஊக்கமும், உத்வேகமும் தருவது. ஆனால், முதல் 50 அல்லது 500 இடங்களைப் பார்த்தால் மேற்சொன்ன பிரிவுகள்/பாலினத்தைச் சேர்ந்தவர்கள் வெகு சொற்பமான இடங்களையே பிடித்திருப்பார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த தனிப்பட்ட நபரின் வெற்றியை இந்த சிக்கலான பின்புலத்தில் பொருத்திப்பேச வேண்டும். அந்த சமூகமே முன்னேறிவிட்டது, எதற்கு இட ஒதுக்கீடு என ஒரு தரப்பு பேசும். இன்னொரு தரப்பு முயன்றால் வெல்ல முடியும், தாழ்வு மனப்பான்மை விட்டொழியுங்கள் என உத்வேக சொற்பொழிவு ஆற்றும்.
கள உண்மை என்ன? எத்தனை அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்தார்கள்? நீட் வருகைக்கு முன்னால் இரட்டை இலக்கத்தில் இருந்தது. தற்போது ஒற்றை இலக்கத்திற்கு மாறியிருக்கிறது. இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், மேற்சொன்ன மாணவர் ஓராண்டு தனியார் மையத்தில் பயிற்சி பெற்றே வென்றிருக்கிறார். அவருக்கான பயிற்சிச் செலவை ஆசிரியர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இத்தகைய வாய்ப்பு மருத்துவர் கனவுமிக்க ஏழை மாணவர்கள் அனைவருக்கும் கிடைக்குமா என்ன?
நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், அரசு/தனியார் மருத்துவக்கல்லூரிகளில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. ப்ளஸ் 2 வில் வெற்றி பெற்றேன். எம்.எம்.சி.யில் இடம் பெறுவதும் ஒன்றல்ல. மேலும், ஒப்பீட்டளவிற்கு நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் தனியார் கல்லூரியில் சேருவது கடினம். நீட் வருகைக்குப் பின்னர் இன்னமும் கட்டணங்கள் எகிறியிருக்கின்றன.
நீட் வருகைக்குப் பின்னால் பெண்களின் எண்ணிக்கை பெருமளவில் மருத்துவக்கல்லூரிகளில் விழுந்திருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நீட் எழுதிய, கோச்சிங் பெற்ற, ஆண் மாணவர்களே அதிகமாக வெல்கிறார்கள். அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கூட மருத்துவக்கல்லூரி வாசல்களை மிதிக்க முடியவில்லை. 7.5% இட ஒதுக்கீட்டை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சட்டம் ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.
தனிப்பட்ட வெற்றிகள் பாராட்டுக்குரியவை. அது அடிப்படையான சிக்கல்கள், பிரச்சனைகள், முரண்பாடுகளில் இருந்து திசை திருப்பும் செயல்பாடாக மாறுவதை கவனத்தில் கொள்ள வேண்டும். முன்பிருந்த நிலை கச்சிதமான ஒன்றில்லை. நீட் இன்னமும் நிலைமையை மோசமாக்கியிருக்கிறது. அதை சீர்செய்ய கொண்டாட்டங்களைத் தாண்டிய செயல்பாடு, உரையாடல் தேவை என்கிறார்.