நடிகர் விஜய் மீது மாற்றுத்திறனாளிகளின் பள்ளி ஆசிரியர் குற்றஞ்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால்கடுக்க பல மணி நேரம் காத்திருந்த ஆதரவற்ற குழந்தைகள்! நம்ப வைத்து ஏமாற்றிய விஜய்! ஆசிரியர் வெளியிட்ட பகீர் தகவல்!

நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பானது பூந்தமல்லியிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து அந்த பள்ளியில் ஆசிரியரான சரவணன் என்பவர் கூறியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அந்த பள்ளியில் எவ்வித பொது நிகழ்ச்சிகளிலும் நடத்த வேண்டாம் என்பதே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் விருப்பமாக உள்ளது என்றும், சிலர் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி அனுமதி வாங்கி விடுவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
அதன்படி நடிகர் விஜய் தன்னுடைய அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை 3 நாட்களுக்கு அந்த பள்ளியில் நடத்தியுள்ளார். இதற்காக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய்யை காண்பதற்கு ஏராளமானோர் பள்ளியின் வாசலில் கூடியதால், யாராலும் எளிதில் உள்ளே செல்லவோ அல்லது வெளியே வரவோ இயலவில்லை. மிகப்பெரிய கெடுபிடிகளுக்கு பின்னரே எஸ்கார்ட்டுகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெளியே செல்ல அனுமதித்தனர்.
மாணவர்களுக்கு படித்து காட்டுவதற்காக வந்த தன்னார்வலர்களையும் படக்குழுவினர் விட்டுவைக்கவில்லை. அவர்களுள் சிலரை திருப்பி அனுப்பிவிட்டனர். மேலும் பள்ளிக்கூடம் என்றும் பாராமல் சிகரெட் பிடிப்பது, குப்பைகளை போடுவது என்று படக்குழுவினர் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இவை அனைத்தையும் நாங்கள் பொறுத்துக்கொண்டதற்கு ஒரே காரணம் எங்கள் மாணவர்களுடன் நடிகர் விஜய் உரையாடுவார் என்பதற்காகவே. மிகப்பெரிய சிரமத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் மேனேஜரை சந்தித்து அனுமதி வாங்கினோம். அவர் முதலில் 4 மணிக்கு பார்ப்பார் என்று கூறினார். அதன் பின்னர் 6 மணிக்கு பார்ப்பார் என்று கூறினார்.
நடிகர் விஜய்யின் வருகைக்காக மாணவர்கள் அனைவரும் ஒன்றாக கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்தனர். படத்தின் இயக்குநர் லோகேஷ் வந்து மாணவர்களிடம் உரையாடி நிச்சயம் விஜய் தங்களை பார்க்க வருவார் என்று கூறினார்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் நடிகர் விஜய் ரகசியமாக வெளியே சென்றுள்ளார். அவர் சென்ற அரை மணி நேரத்திற்கு பிறகு தான் இந்த விஷயம் எங்களுக்கு தெரியவந்தது. இதனால் மாணவர்கள் பெரிதும் மனவேதனை அடைந்தனர். இதற்காக அவர்களிடம் விளக்கம் பெற முயன்றோம், ஆனால் எங்களால் அது இயலவில்லை.
குரலை மட்டும் கேட்டு நடிகர் விஜய்யின் மீது பேரன்பு செலுத்தும் மாணவர்களை அவர் காணவராதது அப்பள்ளி மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.