அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுத்து ஊழலை நாட்டில் பரப்பியதாக கூறி பெரும் தொழில் அதிபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊழல்! லஞ்சம்! தூக்கில் தொங்கவிடப்பட்ட பெரும் தொழில் அதிபர்! எந்த நாட்டில் தெரியுமா?

ஈரானை சேர்ந்தவர் ஹமீத்ரசா பஹெரி டெர்மானி.
இவர் அந்நாட்டின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர். ஈரானின் மிக முக்கியத்
தொழிலான எண்ணெய் உற்பத்தியில் டெர்மானி ஈடுபட்டு வந்தார். அதிலும் கச்சா எண்ணெய்யை
எரிபொருளாக மாற்ற பயன்படும் பிட்டுமென் எனும் வேதிப் பொருட்களை மொத்தமாக கொள்முதல்
செய்யும் தொழில் அதிபர் இவர்.
கடந்த 2015ம் ஆண்டு டெர்மானி போலி நிறுவனங்களை
உருவாக்கி அதன் மூலம் ஈரான் நாட்டு வங்கிகளிடம் கடன் வாங்கி மோசடி செய்தார் என்பது
தான் குற்றச்சாட்டு. மேலும் மோசடியாக பெற்ற கடனை அரசு ஊழியர்களுக்கு லஞ்சமாக
கொடுத்து பிட்டுமென் வேதிப் பொருட்களை விதிகளை மீறி அதிக அளவில் கொள்முதல் செய்து
பெரும் லாபம் ஈட்டினார் என்றும் அவர் மீது புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து பெரும் தொழில் அதிபரான
டெர்மானி கடந்த ஆகஸ்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டுகளை
விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அந்த நீதிமன்றம் கடந்த
அக்டோபர் மாதம் டெர்மானி குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஈரானில் ஊழலை
பரப்பியதற்காக டெர்மானிக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த மரண தண்டனையை எதிர்த்து டெர்மானி ஈரான்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் டெர்மானிக்கு விதிக்கப்பட்ட மரண
தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனை அடுத்து ஈரான் தலைவர் ஹசன் ரவ்ஹானி
உடனடியாக தொழில் அதிபர் டெர்மானியை தூக்கிலிட உத்தரவிட்டார். இதனை ஏற்று
அதிகாரிகள் இன்று டெர்மானியை தூக்கில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்றினர். சீனா,
ஈராக், வட கொரியா போன்ற நாடுகளில் ஊழலுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
ஆனால் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தொழில் அதிபர் ஒருவரை தூக்கில் ஏற்றி
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
ஈரானின் பொருளாதாரத்தை காக்க பொருளாதார குற்றங்களில் அதிலும் ஊழல் செய்பவர்கள்
தொடர்ந்து தூக்கில் ஏற்றப்படுவார்கள் என்று அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.