எடப்பாடி சொன்னது நடக்குது... காவிரி, குண்டாறு இணைப்புக்கு பணிகள் தீவிரம்.

நீண்ட காலமாக திட்டமாகவே கிடக்கும் காவிரி குண்டாறு இணைப்பை தன்னுடைய ஆட்சி காலத்தில் கொண்டுவந்தே தீருவேன் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, காவிரி _- குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக ரூ.331 கோடியில் நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகின்றன.


காவிரி,- வைகை - குண்டாறு இணைப்பு திட்டம், 3 கட்டங்களாக நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்துக்கான மதிப்பீடு ரூ.6,941 கோடி. மத்திய அரசு நிதி, நபார்டு நிதியைப் பெற்று இத்திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, 6 ஆயிரம் கனஅடி கொள்ளளவு கொண்ட கால்வாய் 262 கி.மீ. தொலைவுக்கு வெட்டப்படும். இந்த கால்வாய் காவிரி, கோரையாறு, அக்னியாறு, தெற்குவெள்ளாறு, விருசுழியாறு, பாம்பாறு, மணிமுத்தாறு, சருகுனியாறு, உப்பாறு, வைகை, கிருதம்மாள் நதி, குண்டாறு வரை செல்கிறது.

இத்திட்டப் பணிகள் முழுவதுமாக முடியும்போது மொத்தம் 52,332 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும். கரூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், குடிநீரும் தட்டுப்பாடின்றி தாராளமாக கிடைக்கும். 3 ஆண்டுகளில் இத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதான திட்டமான கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்போது, காவிரி - குண்டாறு இணைப்பு திட்டக் கால்வாயில் ஆண்டுக்கு 80 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதுவரை காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது காவிரி - குண்டாறு இணைப்பு திட்டக் கால்வாயில் வெள்ளநீர் திருப்பிவிடப்படும்.

இத்திட்டத்தின்படி, முதல்கட்ட பணிகளாக திருச்சி முக்கொம்பு அருகே கட்டளை கதவணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஆரம்பகட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இது எடப்பாடியார் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே கூறப்படுகிறது.