உன்னோட உயிரை பற்றி நினைச்சி கூட பார்க்கலியேமா? கொரோனா காலத்தில் இளம் பெண் செய்த நெகிழ்ச்சி செயல்!

ஆஸ்திரேலியாவுக்கு படிப்பதற்காக சென்ற மாணவி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றியதற்காக பிரபல கிரிக்கெட் வீரர் அவரை பாராட்டியிருப்பது இந்தியாவிற்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தில் கோட்டயம் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு கருப்பந்துரா என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு லல்லிசன் மல்லிசேரி என்ற பெண் வசித்து வருகிறார். இவருடைய கணவரின் பெயர் ஆன்சி பிலிஃப். இத்தம்பதியினருக்கு ஷேரன் வர்கீஸ் என்ற மகளுள்ளார். 

இவர் 2016-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படிப்பதற்கு சென்றார். ஆஸ்திரேலியா நாட்டின் வொல்லாகாங்க் பல்கலைக்கழகத்தில் நர்சிங் படிப்பு படித்து வந்தார். 3 ஆண்டுகளில் அவர் படிப்பை முடித்த பிறகு அந் நாட்டின் மிகப்பெரிய மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் வாய்ப்பை பெற்றார்.

ஆனால், அவர் அந்த வாய்ப்பை துறந்து அதே பகுதியிலுள்ள "கிரீன்ஹெல் மேனர்" என்ற முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்தார். அந்த முதியோர் இல்லத்தில் அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்  மேற்கொள்ளப்பட்டன.  செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் முதியோர் இல்லத்திற்கு நுழையும்போதே உடைகளை மாற்றி உள்ளே செல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டதால், அந்த முதியோர் இல்லத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாக அந்த முதியோர் இல்லத்தை பாராட்டியது. ஷேரன் வர்கீஸை, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஆடம் கில்கிறிஸ்ட் வெகுவாக பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், "இந்தியாவிலிருந்து படிப்பதற்காக வந்து இங்குள்ள முதியோர்களை காப்பாற்றுவது நீங்கள் ஆற்றிய பணி எங்கள் அனைவரையும் மகிழ்வித்துள்ளது. நீங்கள் உங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் எங்கள் நாட்டில் முதியவர்களை காப்பாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் உங்களுக்கும் இந்தியாவுக்கும் நிச்சயமாக பெருமையை தேடித்தரும்" என்று புகழ்ந்தார்.

இவருடைய புகழ்ச்சியினால் மிகவும் மனம் குளிர்ந்த ஷேரன் வர்கீஸ், "ஆடம் கில்கிறிஸ்ட் என்னை புகழ்ந்திருப்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. என்னுடைய தந்தை மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகர் என்பதால் கில்கிறிஸ்ட் என்னை புகழ்ந்திருப்பதற்கு நிச்சயம் பெருமைப்படுவார்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு சென்று கொரோனா தடுப்பு பணியில் திறம்பட செயல்பட்டுள்ள கேரளா மாணவியை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.