இன்று கடைசி டி20 போட்டி! மீண்டும் அணிக்குத் திரும்பும் வில்லியம்சன்! ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இன்று தொடங்க உள்ளது.


இந்திய அணி நியூசிலாந்தில் டி20 ஒருநாள் போட்டி டெஸ்ட் போட்டிகளில் விளையாட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதுவரை நடந்துள்ள 4 டி-20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் திரில் வெற்றி பெற்றது. கடந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் வாய்ப்பில் இருந்த நியூசிலாந்து அணி கோட்டை விட்டு தோல்வியை தழுவியது. காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாட முன் இருந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி வாய்ப்பு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ரோகித் சர்மா இந்த போட்டியில் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.