நான் உயிரோடு இருக்கிறேன்..! வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் மனைவிக்கு போன் செய்து சொன்ன வார்த்தை! எல்லையில் நடந்தது என்ன?

இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்பட்ட ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் அதிசயமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தங்களுடைய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளத்தில் 66 முக்கியமான சாலைகளை இந்தியா நிர்மாணித்து வந்ததால் சீனா கோபமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரு நாட்டு போர் வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. 

நேற்றிரவு இந்திய மக்களுக்கு மேலும் ஒரு துயரமான செய்தி வெளியானது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்கள் உள்பட மேலும் 17 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது. பீகார் மாநிலத்தை சேர்ந்த சரண் மாவட்டத்திற்குட்பட்ட திக்ரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் சுனில்.

இவரும், நாட்டுக்காக தங்களுடைய இன்னுயிரை நீத்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர் என்று மத்திய அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இதனால் இவருடைய குடும்பத்தினர் பேர் அதிர்ச்சி அடைந்து மீளாத்துயரில் வாடி வந்தனர். ஆனால் பெயர் சரி பார்த்ததில் வேறு ஒரு சிப்பாய் இருந்ததற்கு இவருடைய பெயர் தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை ராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உடனடியாக சுனிலின்  சகோதரரான அனிலை தொடர்பு கொண்டு, சுனில் நலமுடன் இருப்பதாக கூறியுள்ளனர். பின்னர் நேற்று சுனிலை அவருடைய குடும்பத்தினருடன் பேச வைத்துள்ளனர். அவருடைய மனைவி கூறுகையில், "இராணுவ பிரிவிலிருந்து அழைப்பு வந்தவுடன் எனக்கு சற்று நம்பிக்கை கிடைத்தது. இருப்பினும் அவருடைய குரலை கேட்கும் வரை குடும்பத்தினர் அனைவரும் பதற்றத்தில் இருந்தோம். அவருடைய குரலை கேட்ட பிறகுதான் சற்று மனநிம்மதி அடைந்தோம்" என்று கூறினார்.

இந்த செய்தியானது அவருடைய குடும்பத்திற்கு இழந்த சந்தோசத்தை மீட்டு கொடுத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.