குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது தான் தேசபக்தி! மோடி கூறும் புதுக் காரணம்! ஏன் தெரியுமா?

தேசப்பற்று என்பதை உண்மையில் குறிப்பிட வேண்டும் என்றால் குடும்பக் கட்டுப்பாடுதான் என்று மோடி சுதந்திர தின விழாவில் பேசியுள்ளார்.


மக்கள் தொகையில் சீனாவை முந்துகிறது இந்தியா

இந்தியாவின் 73வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் மாணவர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மூவர்ணக் கொடியேற்றி மரியாதை செலுத்தினர்.

நாட்டின் பிரதமர் என்ற அடிப்படையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றி வைத்து உரையற்றினார். அப்பொழுது பேசுகையில் 1.3 பில்லியன் மக்கள்  தொகை கொண்ட இந்தியா தற்போது சீனாவை முந்திக்கொண்டு செல்வதாகவும் இது எதிர்கால சந்ததியினர் பெரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். 

மக்கள் தொகை வெடிப்பு பற்றி பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வும், விவாதமும் தேவைப்படுவதாக தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி குடும்பக் கட்டுப்பாடுதான் உண்மையான தேசபக்தி என்று தெரிவித்தார். 

மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த மோடி, போதிய விழிப்புணர்வு உள்ள தாய்மார்கள் தேவைக்கு மீறி குழந்தை பெற்றால் அந்த குழந்தையின் தேவைகளை பாரபட்சமின்றி பூர்த்தி செய்யமுடியுமா என்பதை சிந்தித்து பார்க்கின்றனர் என கூறினார். 

குடும்பக் கட்டுப்பாடுடன் இருப்பவர்களிடம் மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அவர்கள்தான் தேசபக்தியை கடைப்பிடிக்கிறார்கள் எனவும் பெருமிதம் கொண்டார் பிரதமர் நரேந்திரமோடி.

21 ஆம் நூற்றாண்டில், தனிநபர்கள் ஆரோக்கியமாகவும் வளமாகவும் இருந்தால்தான் தொழில் வளர்ச்சி பெருகும் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் சட்ட திட்டங்கள் மூலமே அனைத்தையும் சரி செய்துவிட முடியாது என குறிப்பிட்டு பேசினார்.

குடும்பக் கட்டுப்பாட்டை பொறுத்தவரை எந்த சட்டத் திட்டத்தையும் கடுமையாக அமல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். சில மாநிலங்களில் 2 குழந்தைகள் மேல் பெற்றவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படுகிறது என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

மேலும் சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியும் பலருக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.

புதிய இந்தியா திட்டம் மூலம் அனைவருக்கும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்ல ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டம் ரூ.3.5 லட்சம் கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் பிரதமர் மோடி