இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ரத்து! பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.


தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே நடைபெற இருந்த முதல் ஒருநாள் போட்டி நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையாக அடுத்து நடைபெற உள்ள இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்து இருந்தது. 

இந்நிலையில் இன்று நண்பகல் ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியது. இந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த சில மணி நேரங்களிலேயே கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடக்க இருந்த இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் உடனடியாக தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.