வேலம்மாள் கல்வி குழுமத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 400 கோடி ரூபாய் சிக்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலம்மாள் குழும ரெய்டில் சிக்கிய 400 கோடி ரூபாய் சொத்துக்கள்..! மாணவர்களிடம் கொள்ளை அடித்த பணமா?

தமிழ்நாட்டில் இயங்கிவரும் பிரபல கல்வி குழுமங்களில் வேலம்மாள் கல்வி குழுமம் ஒன்று. இங்கு தொடர்ந்து அதிகளவில் நன்கொடை பெற்று வருவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
தமிழகம் முழுவதிலும் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமாக தமிழகத்தில் இயங்கி வரும் பள்ளிகள், ஆசிரமங்கள், கல்லூரிகள் ஆகிய 60 இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் 4 நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சோதனையின் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதாவது அனைத்து இடங்களையும் சேர்த்து 2 கோடி ரூபாய் ரொக்க பணமும், 400 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் கணக்கில் வராமல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஓவ்வொரு இடத்தின் அதிகாரிகளிடமும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கணக்கில் வராத பணம் குறித்து எவ்வாறு வழக்கு தொடரலாம் என்றும் வருமானவரி துறையினர் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து வருகின்றனர்.
இந்த சம்பவமானது தமிழ்நாடு முழுவதிலும் வேலம்மாள் கல்வி குழுமத்தினருக்கு சொந்தமான இடங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.