கருப்பு பணம் பதுக்கல்! அம்பானி குடும்பத்துக்கே வருமான வரித்துறை நோட்டீஸ்?

முகேஷ் அம்பானிக்கு வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவமானது தொழிலதிபர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்திய நாட்டின் வருமான வரித்துறையினர் இந்தியர்களின் வெளிநாட்டு கணக்குகளை கண்காணித்து வருகிறது. இதனால் 2011-ஆம் ஆண்டில் ஜெனீவாவிலுள்ள ஹெ.எஸ்.பி.சி வங்கியில் கணக்குள்ளவர்களின்  பெயர்களை வருமான வரித்துறையினர் சேகரித்துள்ளனர். இது சம்பந்தப்பட்ட விசாரணை பல நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. 

பல நாடுகளின் புலனாய்வுத்துறையின் ரிப்போர்ட்டை அடிப்படையாக வைத்து இந்திய வருமானவரித்துறையினர் முகேஷ் அம்பானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். முகேஷ் அம்பானி, அவருடைய மனைவியான நீதா அம்பானி மற்றும் மகனுக்கு மார்ச் மாத இறுதியில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கையை மிகவும் ரகசியமான முறையில் வருமான வரித்துறை கையாண்டதாக தெரிகிறது.

கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது. கருப்பு பண தடுப்பு பிரிவு சட்டம் ஆகிய 10 பிரிவுகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளில் இயங்கிவரும் கேபிடல் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட், கேமன் தீவுகளை அடிப்படையாக கொண்ட இன்ஃப்ராஸ்டிரக்சர் கம்பெனி ஆகிய நிறுவனங்களின் இறுதி பயனர்களாக அம்பானி குடும்பத்தினர் விளங்கியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் இது குறித்து அவர் கணக்குகளில் காட்டாததால் இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். 

இதற்கு தெளிவான முறையில் பதில் அளிக்குமாறு முகேஷ் அம்பானிக்கு ஏப்ரல் 12ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்ததாக தெரியவருகிறது. இந்நிலையில் இந்த செய்தியை ரிலையன்ஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

இந்த சம்பவமானது தொழிலதிபர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.