பிரம்மச்சரிய முருகப்பெருமானை தரிசிக்க ஆசையா? இதோ இந்த திருத்தலம் வாருங்கள்!

சிவபெருமானின் புதல்வரால் மட்டுமே தனக்கு மரணம் நேரிடவேண்டும் என்ற வரத்தைப் பிரம்மாவிடம் கேட்டுப் பெற்று, தேவர்களைத் துன்புறுத்திய தாருகாசுரனை வதம் செய்வதற்காக சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து அக்னி சொரூபமாக அவதரித்தவர் முருகப் பெருமான்.


கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயர் என்று முருகப் பெருமானைப் போற்றி வணங்குகிறோம். விநாயகப் பெருமானுக்கும், முருகப் பெருமானுக்கும் இந்தியா முழுவதும் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. நாம் இங்கு விநாயகப் பெருமானை பிரம்மச்சாரியாக வழிபடும்போது, வட மாநில மக்கள் இவரை சித்தி புத்தி என்ற இரு தேவியரோடு வழிபடுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் முருகப் பெருமானை வள்ளி தேவசேனா சமேதராக பக்தர்கள் வழிபட்டாலும், வட மாநிலங்களில் கார்த்திகேயன் என்ற பெயரில் தேவியர் இன்றி பிரம்மச்சாரியாகவே வழிபடுகின்றனர்.

ஹரியானா மாநிலம், குருக்ஷேத்ரா மாவட்டம், பிஹோவா என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகார்த்திகேயா மந்திர், வட மாநிலங்களில் உள்ள மிகப் பிரபலமான முருகன் ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. மஹாபாரத நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தலம். இங்கு மஹாவிஷ்ணுவின் அம்சமாக, வேனன் என்ற மன்னன் வழியில் அவதரித்த பிருது மன்னர், பூமியிலிருந்து செல்வங்களைப் பெற்று மக்களுக்கு அளித்த பெருமைக்குரியவர்.

இவர் பெயராலேயே பூமிக்கு பிருத்வி என்ற பெயர் ஏற்பட்டதாம். சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்து, தன் முன்னோருக்கு சிரத்தையுடன் பிருது சக்கரவர்த்தி ஈமக் கடன்களைச் செலுத்தியதால் இந்த இடம் அவர் பெயரால் பிருது டக் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் பிஹோவா, பேவா, பிவோ என்ற பெயர்களில் மருவியிருப்பதாக தல புராணம் தெரிவிக்கிறது.

பிருது சக்கரவர்த்தியின் தந்தை, தான் சரஸ்வதி நதிக்கரையில்தான் உயிர் துறக்க வேண்டும் என்று விரும்பியதால், பிருது அவரை இத்தலத்திற்குக் கூட்டி வந்தார் என்றும், அவர் மறைவிற்குப் பின்னர் ஆற்றின் கரையில் பல நாட்கள் அமர்ந்து கடுமையான விரதங்கள் அனுஷ்டித்து தன் தந்தைக்கு மிகவும் சிரத்தையுடன் பிதுர்க் கடன்களைச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த பிருது சக்கரவர்த்தியின் நினைவாகவே பிஹோவா நகரம் கிபி 895ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சரஸ்வதி நதிக்கரையில் அமைந்திருந்த இந்த பிஹோவாவில் உள்ள தீர்த்தம், ஆதி தீர்த்தம் எனவும் காசி, கயா, பிரயாகை போன்ற புனித தீர்த்தங்களுக்கு நிகரானதாகவும் போற்றப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் புனித நீராடி தர்ப்பணம், பிண்ட தானங்கள் செய்தால் பித்ருக்கள் மோட்சத்தை அடைவர் என்ற நம்பிக்கை உள்ளது. சரஸ்வதி சரோவர் எனப்படும் இந்த தீர்த்தக் குளத்தின் கரையில் பிருது மன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிருது மஹேஷ்வர் மற்றும் அருகில் உள்ள 'கார்த்திகேயர் ஆகியோர் பித்ருக்கள் மோட்சம் செல்வதற்கு சாட்சியாக விளங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இத்தலமும், தீர்த்தமும் சீக்கியர்களுக்கும் புனிதமானவையாகத் திகழ்கின்றன.

எனவே ஆயிரக் கணக்கான சீக்கியர்களும், இந்துக்களோடு இந்த தீர்த்தத்தில் நீராடுவதைக் காணமுடியும். ஆஷாட மாதம், மிருகசீர்ஷ நட்சத்திர நாளன்றும், சைத்ர கிருஷ்ண துவாதசி முதல் அமாவாசை வரையிலுமான நாட்களிலும் இத்தலத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்டு சரஸ்வதி சரோவர் குளக்கரையில் திதி, தர்ப்பணம், பிண்ட தானம் போன்றவற்றைச் செய்தால் முன்னோர்கள் மோட்சம் அடைவர் என்ற நம்பிக்கையில் லட்சக் கணக்கான மக்கள் இங்கு கூடுகின்றனர்.

கைலாயம் சென்ற நாரதர் தன் கையில் இருந்த அரிய மாங்கனியை சிவ-பார்வதியிடம் கொடுக்க, அதைப் பெறும் பொருட்டு விநாயகருக்கும், முருகப் பெருமானுக்கும் இடையே உலகைச் சுற்றி வரும் ஒரு போட்டி நடைபெற்றது என்றும், விநாயகப் பெருமான் தன் தாய் தந்தையை வலம் வந்து மாங்கனியைப் பெற்றுக் கொள்ள, தன் மயில் மீது உலகைச் சுற்றி வந்த முருகப் பெருமான் இது அறிந்து கோபித்து ஆண்டியாக பழனிமலையில் குடியேறினார் என்றும் தமிழ்நாட்டில் வழங்கும் புராணக் கதைகள் நாம் நன்கு அறிந்தவையே.

ஆனால் பெஹோவா கார்த்திகேயர் ஆலயத்தின் பின்னணியிலும் இதே கதையைக் கூறுவதோடு, திரிலோகப் பரிக்ரமா சென்ற முருகப் பெருமான் தனக்கு மாங்கனி கிட்டாமல் போகவே, தன் பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு இங்கு வந்து தனியே கோயில் கொண்டார் என இந்தத் தலபுராணம் சொல்கிறது! தன் தாயிடம் கோபித்துக் கொண்டு பிரம்மச்சாரியாகக் கோயில் கொண்டுள்ளதால் இங்கு கார்த்திகேயர் ஆலயத்திற்குள் நடுத்தர வயதுப் பெண்மணிகளுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ஆயினும் சபரி மலை போன்றே சிறுமிகளும், வயது முதிர்ந்த பெண்களும் இந்த ஆலயத்திற்குள் சென்று வழிபடலாம்.

வசிஷ்டர் போன்றே தனக்கும் பிரம்ம ரிஷி பட்டம் கிடைக்கவேண்டும் என்று விஸ்வாமித்திரர் தவம் இயற்றி இறுதியாக அந்தப் பட்டத்தைப் பெற்ற புனித தலம் இந்த பெஹோவா என்று கூறுகின்றனர். மஹாபாரதப் போரோடு இந்த ஸ்ரீகார்த்திகேயர் ஆலயத்திற்கு இருக்கும் தொடர்பும் குறிப்பிடத்தக்கது. பதினெட்டு நாட்கள் நடைபெற்ற மஹாபாரதப் போர் இங்கிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குருக்ஷேத்ராவில் நடைபெற்றதாக ஐதீகம் உள்ளது. இந்தப் போரில் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் தம்முடைய 18 லட்சம் வீரர்களை இழந்தனர். இதனால் மிகவும் மனச் சஞ்சலமடைந்திருந்த யுதிஷ்டிரர் கிருஷ்ண பகவானின் அறிவுரைப்படி மறைந்த மாவீரர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடையவேண்டி இந்த கார்த்திகேயர் ஆலயத்திற்கு வந்து வழிபட்டு இரண்டு நந்தா விளக்குகளை ஏற்றி வைத்தாராம்.

தற்போதும் இந்த ஆலய வளாகத்தில் காணப்படும் கல்லினால் வடிக்கப்பட்ட இரண்டு விளக்குகள் யுதிஷ்டிரரால் ஏற்றி வைக்கப்பட்டவை என்றும், இதனாலேயே, பாரதப் போர் நடைபெற்று 4500 ஆண்டுகள் ஆகிவிட்டதால், இந்த ஆலயமும் 4500 ஆண்டுகள் பழமையானது என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். காசி, கயா, பிரயாகை போன்ற தலங்களுக்கும் முற்பட்டதாக இத்தலத்தை பக்தர்கள் பெருமையோடு கூறுகின்றனர். மார்க்கண்டேய புராணம், வாமன புராணம் போன்ற புராணங்களில் இத்தலம் பற்றிய குறிப்புகள் உள்ளனவாம். ஏழாவது நூற்றாண்டில் இந்தியா வந்த சீன யாத்திரிகர் யுவான் சுவாங், பிஹோவா பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் புனிதத் தலமாகக் கருதப்படும் பிஹோவாவில், விலங்குகளைக் கொல்வதும், மாமிச உணவுகள் விற்கப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் கருவறையில் ஸ்ரீகார்த்திகேயர், ஷண்முகராக ஆறு முகங்களோடும் நான்கு கரங்களோடும் முன் இரு கரங்கள் அபய-வரத முத்திரை காட்ட, பின் இடக்கரத்தில் நாகத்துடன் கூடிய உடுக்கை, பின் வலக்கரத்தில் சக்தி ஆயுதம் ஆகியவற்றை ஏந்தி, மயில் மீது ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். வட இந்தியப் பாணியில் கூரிய நான்கு பட்டை விமானத்துடன், ஒரே ஒரு கருவறையுடன் அமைந்த சிறிய ஆலயம் இது.

சாதுர்மாஸ்யம் எனப்படும் ஆவணி முதல் கார்த்திகை வரை நான்கு மாதங்களில் (ஜூலை முதல் அக்டோபர்) இங்கு வந்து 'கார்த்திகேயப் பெருமானை தரிசித்தால் வாழ்க்கையின் அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து, வெற்றி ஏற்படும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது. மேலும் செவ்வாய்க் கிழமைகளில் காலை 7 முதல் 8 மணிக்குள் சிறப்பு வழிபாடுகள் செய்ய, செவ்வாய் தோஷம் நீங்கும் என்றும், அவ்வாறு தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமைகள் வழிபட்டால் எதிரிகளின் தொல்லை தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இங்குள்ள ஸ்ரீபசுபதிநாத் மஹாதேவ் மந்திர், ப்ராசீன தீர்த்தம், ஸ்ரீசரஸ்வதி ஆலயம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி - ஹனுமான் ஆலயம் போன்றவை மிகப் பிரபலமான இதர ஆலயங்களாகும்.