முருகப்பெருமானுக்கு மூஞ்சூறு வாகனம்! தீச்சட்டி நேர்த்திக்கடன்! எங்கேன்னு தெரியுமா?

அம்மன் கோவில்களில் திருவிழாவின்போது பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றுவது வழக்கம்.


ஆனால் அதுபோன்ற வழக்கம் கடைபிடிக்கப்படும் அரிய ஆறுமுகன் கோயிலாக திகழ்கிறது விழுப்புரத்தில் உள்ள சுப்பிரமணியர் ஆலயம். பழமை வாய்ந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டு கடந்த ஆண்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் கண்டு புதுப்பொலிவோடு விளங்குகிறது.

கிழக்கு நோக்கிய ஆலயம். முகப்பில் முருகனின் திருமணக்காட்சி அலங்கரிக்கிறது. அதில் ஏராளமான தெய்வங்களும் தேவர்களும் இடம் பெற்றுள்ளனர். வெளியே வேலினை வணங்கிவிட்டு சில படிகள் ஏறி உள்ளே நுழைந்தால் நேரே கருவறை. அங்கே வள்ளி-தெய்வானை சமேதராக சுப்ரமணியர் எழுந்தருளியுள்ளார்.

மூலவருக்கு எதிரில் மூஞ்சூறு வாகனம், பலிபீடம், வேல் காட்சி தருகிறது. பொதுவாக முருகன் கோயில்களில் மயில்தான் முருகனுக்கு வாகனமாக அவர்முன் இருக்கும். இந்த கோவிலில் மூஞ்சூறு வாகனம் இருப்பது அதிசயம். அமைப்பு வித்தியாசமாக இருந்தாலும் இப்படி அமைக்கப்பட்டது ஏன் என்பதற்கான காரணம் யாருக்கும் தெரியவில்லை.

படித்ததும் நீண்ட நாட்களாக சரியான வேலை கிடைக்காமல் விரக்தியடைந்த பலர் இந்த ஆலயம் வந்து தங்கள் கல்வி சான்றிதழ், வேலை கோரும் விண்ணப்பம் போன்றவற்றை சுப்பிரமணியரின் திருவடியில் வைத்து பூஜை செய்து எடுத்துச் செல்கின்றனர்.

சில நாட்களிலேயே அவர்களுக்கு உரிய வேலை கிடைத்துவிடுகிறது. அவர்கள் வேலையில் சேர்வதற்கு முன் அதற்கான உத்தரவை சுப்பிரமணியரின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.

தினமும் மூலவருக்கு பால் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. பின்னர் அபிஷேகம் செய்யப்பட்ட பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. நோய்நொடிகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பாலை சிறிதளவு அருந்தினால் விரைவில் அவர்களை நோய் குணமாவதாக நம்பிக்கை.

அபிஷேகங்கள் அலங்காரங்கள் முடிந்ததும் சுப்பிரமணியருக்கு வியர்ப்பதாகச் சொல்கிறார்கள். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தர்கள் உரக்கக் கூற மூலவருக்கு வெண்சாமரம் வீசப்படுகிறது. அதன்பிறகு கற்பூர ஆராதனை காட்டப்படுகிறது.

பெரிய விழாவாக பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது. வேண்டுதலுக்கு ஏற்றார் போல் சுப்பிரமணியருக்கு பன்னீர் காவடி, புஷ்ப காவடி, பால் காவடி எடுக்கப்படுகிறது. இந்த விழாவில்தான் பக்தர்கள் வித்தியாசமாக ஆறுமுகனுக்கு தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் கந்தனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள். அவர்களது வேண்டுதல் நிறைவேறியதும் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று வள்ளி தெய்வானை சமேதராக முருகப்பெருமான் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்.

மாத கார்த்திகை அன்று மாலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. குழந்தை இல்லாத தம்பதிகள் அதில் கலந்து கொண்டு சுப்பிரமணியரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிட்டுகிறதாம். வேண்டுதல் நிறைவேறியதும் குழந்தையை இங்கு கொண்டு வந்து முருகப் பெருமானின் மடியில் வைத்து வணங்கி விட்டுச் செல்கின்றனர். எனவே ஊஞ்சல் உற்சவம் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

பொதுவாக கோவில்களில் பூஜை நேரத்தில் மணி அடிக்கப்படும். ஆனால் இங்கு வரும் பக்தர்கள் கோயிலில் உள்ள மணியை ஒருமுறை அடித்துவிட்டே தங்கள் வேண்டுதலை இறைவனிடம் தெரிவிக்கிறார்கள். எனவே இங்கு எப்போதும் மணியோசை கேட்டுக் கொண்டே இருப்பது சிறப்பு.