இறைவன் பலாபழ வடிவத்தில் காட்சி தரும் கோயில் இது. இங்கு பலா பழம் சாப்பிட்டால் என்ன விபரீதமாகும் என்று தெரியுமா?

உறையூரை தலைநகரமாகக் கொண்டு சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் ஆண்டு வந்த நேரம்.


முதலாம் பராந்தக சோழனின் மகள் குந்தவி தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற அவளால் கட்டப்பட்டது திருச்செந்துறை என்ற ஊரிலுள்ள சந்திரசேகர சுவாமி ஆலயம். உறையூரிலிருந்து 12 மைல் தொலைவுக்கு அப்பால் பலாமரக்காடுகள் இருந்தன. அங்கே மிருகங்கள் நிறைய வசித்தன அதில் மான்கள் அதிகம். அகன்ற காவிரியை ஒட்டி காடு இருந்ததால் மான்கள் அங்கே நீர் அருந்தி இளைப்பாற வரும்.

மன்னர் வாரம்தோறும் மான் வேட்டைக்கு அங்கே செல்வது உண்டு. அப்படி ஒருநாள் சென்றபோது கண்ணில் பட்ட ஒரு மானை தேடி சென்றார் மன்னர். உயிருக்கு பயந்த அந்தமான் ஓடிச்சென்று ஒரு பலா மரப் பொந்தினுள் மறைந்தது. சினம் கொண்ட மன்னர் அம்பை ஏவினார். மான் மேல் அம்புபட குருதி செந்நீராய் கொட்டியது. மான் துவண்டு விழ, மன்னா! இந்த மரத்தில் நாம் இருக்கிறோம். எனக்காக இங்கே ஒரு சிவாலயம் கட்டு என்று இறைவன் வாக்காக அசரீரி ஒலித்தது. உணர்ச்சிவசப்பட்ட மன்னன் அப்படியே செய்கிறேன் என்றார்.

செந்நீர் பெருகிய அந்தப் பகுதிக்கு திருச்செந்துறை என பெயரிட்டார். மணற்பாங்கான அந்த இடத்தில் கருங்கல் பாறை கிடையாது எனவே மன்னரால் அங்கு கோயில் கட்ட இயலவில்லை. இந்நிலையில் அவருக்குப் பின்னர் அவரது ஆசையை மகள் குந்தவி நிறைவேற்றி வைத்தாள்.

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் 5 நிலை இராஜகோபுரம். பின் நீண்ட வெளிப்பிரகாரம். அதனையடுத்து முன் முகப்பு. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம். அங்கே வேலைப்பாடுகளுடன் கூடிய 33 கல் தூண்கள். வலதுபுறம் இறைவி மானேந்தியவல்லி சன்னதி உள்ளது.

கருவறையில் இறைவன் சந்திரசேகர சுவாமி எழுந்தருளியுள்ளார். இத்தல சிவபெருமானின் உருவம் பலாப்பழத்தின் மேல் முள் போன்றும், வேர் முடுச்சுக்களும் நிறைந்து காணப்படுகி்ன்றன. சிவனின் முகத்தில் ஈசானதிக்கிலும், தென் கிழக்கு திக்கிலும் சிவனின் ருத்ரத்தை தனிக்கும் வண்ணம் இரண்டு சூலங்கள் தாங்கி சாந்தமாக காட்சி தருகிறார். சிவனின் உருவம் கரடுமுரடாக இருப்பதால் சந்திரசேகரனுக்கு உகந்த தினமான திங்கட்கிழமை 8 வாரம் நெய் தீபம் ஏற்றி சிவனின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட விபூதியை உடலில் பூசிக்கொண்டால், உடலின் மேல்புறம் உள் புறம், உள்ள தீராத மேகநீர் சருமநோய்கள் நீங்கும் என்று நாடி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வடக்கு பிரகாரத்தில் தனி மேடையில் தலவிருட்சமான பலாமரம் உள்ளது. பொதுவாக பலாப்பழத்தில் 200க்கும் மேற்பட்ட சுளைகள் இருக்கும். ஆனால் இந்தப் பலாவில் 20 சுளைகள் மட்டுமே இருக்கிறது. இதை எவரும் உண்ணக் கூடாதாம். மீறி உண்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் என்கின்றனர். மேலும் இந்த ஊரில் வேறு எங்குமே பலா மரங்களே கிடையாது என்பது வியப்பான செய்தி.

குழந்தை பேறு வேண்டும் பெண்கள் தலவிருட்சமான பலா மரத்தில் துணியினால் தூளி கட்டி பொம்மை குழந்தையை அதில் கிடத்தி மரத்தை சுற்றி வருகின்றனர். பின்னர் இறைவன் இறைவிக்கு அர்ச்சனை செய்கின்றனர். விரைவில் அவர்களது பிரார்த்தனை பலிக்கிறதாம்.