சேற்றில் மலர்ந்த செந்தாமரையைப் போல வேடுவ குலத்தில் பிறந்தது இந்தக் குழந்தை.. சிலருக்கு பகவானின் அனுக்கிரகமும் வீடுபேறும் தங்களது வாழ்நாளில் அவர்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகள், பாவ புண்ய பலன்களால் கிட்டும்.
ராமாயணத்தில் வரும் இந்த சபரி யார்? ராமரிடம் சபரி கொண்டிருந்த அளவில்லாத பக்தியினால் சபரிக்கு கிடைத்த பலன் என்ன?

ஆனால் சில அபூர்வ ஆத்மாக்கள் பிறக்கும் போதே பகவானின் அனுக்கிரத்தோடு பூமியில் உதிக்கும். அப்படி ஒரு அபூர்வ ஆத்மா தான் சபரி. அவள் மற்ற வேடுவக் குழந்தைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டிருந்தாள். பிற குழந்தைகளைப் போல சேற்றிலும் மண்ணிலும் ஓடி விளையாடவில்லை. தன் பிறப்பு இதற்கானதல்ல, எனும் நினைப்பும் தான் அடைய வேண்டியது எங்கோ ஒளிந்திருக்கிறது என்றும் தோன்றியது. அதைத் தேடி அடையும் பெரும் வேட்கையும் அவளுக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் யாரிடமும் சொல்லாமல் அவளுடைய இருப்பிடத்தை விட்டு வெகு தொலைவு கிளம்பி விட்டாள். வேடுவப் பெண் அல்லவா இயல்பிலேயே அவளுக்கிருந்த துணிவும் அஞ்சா நெஞ்சமும் அத்தனை தூரம் காட்டில் பயணிக்க உறுதுணை புரிந்தது.
அவள் நீண்ட தூரம் பயணித்து தன் கூட்டத்தை விட்டு வந்து சேர்ந்த இடம் மதங்க முனிவரின் ஆசிரமம். அவள் அங்கு அடைந்த போது ப்ராத்த காலம் எனச் சொல்லப்படும் அதிகாலை. முனிவர்களும் சீடர்களும் சற்றே தொலைவில் இருக்கும் பம்பை நதியில் நீராடுவதற்கு செல்வதைப் பார்க்கிறாள். அவர்கள் செல்லும் வழியில் முட்களும் செடி கொடிகளும் காய்ந்த சுள்ளிகளும் நிரம்பி வழிதடத்தை அடைத்துக் கொண்டிருப்பதையும் காண்கிறாள். மதங்க முனியின் தெய்வீக உருவமும் அவர் சீடர்களின் ஒழுங்கு நெறியும் அவளுள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
தன்னால் இயன்ற சேவையை இவர்களுக்கு செய்ய வேண்டும் என்று தீர்மானித்து தினமும் அவர்கள் வந்து போகும் வழியை சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறாள். சுள்ளிகளை பொறுக்கி தூர எறிந்து, செடிகளையும் கொடிகளையும் வெட்டி சீர் திருத்தி அங்கங்கு விழுந்திருந்த குச்சிகளை சேர்த்து துடைப்பம் போல் கட்டி கூட்டி பெருக்கி சுத்தம் செய்கிறாள். அவ்விடம் துப்புரவாகவும் குளிர்ச்சியாகவும் எப்போதும் இருக்கும் படி நீர் தெளித்து கோலமிட்டு வைக்கிறாள். அடுத்த நாள் அவ்வழியே சென்ற மதங்க முனிவர் யார் கல்லும் முள்ளும் நிறைந்த இவ்விடத்தை இத்தனை சுத்தமாக மாற்றியது என அதிசயித்து சீடர்களிடம் கேட்க, தங்களுக்கும் தெரியாது என்கின்றனர். ஒரு சீடனை அன்றிரவு அங்கேயே தங்கி இருந்து யார் இதைச் செய்வது என பார்க்கும் படி பணிக்கிறார் மதங்க முனிவர். அச்சீடனும் பார்த்து வந்து ஒரு சின்ன குழந்தை தான் இத்தனையும் செய்கிறாள் என்றான். ஆசிரமத்துக்கு அழைத்து சபரியை பற்றி முழு விபரம் அறிகிறார் மதங்க முனிவர். அவருக்கு அப்போதே தன் ஞான திருஷ்டியில் சபரியின் பிறப்புக் காரணத்தை அறிய முடிந்தது. அவரை வணங்கிய சபரி தன்னால் இயன்ற சேவையை அவர்களுக்கு செய்து வர அனுமதி தருமாறு வேண்டுகிறாள். பின் மதங்க முனிவரின் ஆசியுடன் அவருக்கும் சிஷ்யர்களுக்கும் சேவை செய்து கொண்டு மனநிறைவுடன் தன் காலத்தை கழிக்கிறாள் சபரி.
இது இவ்வாறாக இருக்க, மதங்க முனிவரின் குடிலைச் சுற்றி வசித்த மற்ற முனிவர்கள் சபரியைப் பற்றி தவறாக அவதூறு பேச ஆரம்பித்தனர். இப்படியாக அருகருகே இருந்த மற்ற எல்லா ஆசிரமங்களிலும் வதந்தி பரவி அடுத்த ஆசிரமத்தின் சீடன் ஒருவன் மதங்க முனிவரின் சீடனிடம் சபரியைப் பற்றி அவதூறாக பேசி வம்பிழுத்தான். கேலி பேசிக் கொண்டே குளிப்பதற்காக பம்பையில் இறங்கினான். அவன் கால் வைத்தவுடன் பம்பை நதி முழுவதும் கருமை நிறத்தில் கூவம் போல் கழிவு நீராகி துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
அதைக் கண்டு பதைத்த எல்லா சீடர்களும் மதங்க முனிவரிடம் ஓடி நடந்ததைக் கூறினர். முனிவர் மென் முருவலுடன் ’ஓ! அப்படியா விஷயம். சரி பாதகம் இல்லை. சபரியை நான் சொன்னேன் என்று சொல்லி அதில் நீராடச் சொல்லுங்கள்’ என்றார். சபரியும் அவரின் ஆக்ஞைப்படி சாக்கடை போல் துர்நாற்றத்துடன் ஓடிக் கொண்டிருந்த பம்பை நதியில் முகச் சுழிப்பின்றி இறங்கினாள். அட! என்ன ஆச்சரியம் அவள் நீரில் இறங்கியதுமே கழிவு நீர் போல ஓடிக் கொண்டிருந்த நதி நிறம் மாறி சுத்தமான ஸ்படிகம் போன்று ஆகிவிட்டது. சபரியைப் பற்றி இழிவாக பேசியவர் எல்லாம் இதைக் கண்டும் கேள்விப்பட்டும் தத்தம் வாயை மூடிக் கொண்டனர். அவளுடைய பெருமையை அனைவரும் உணரும் விதமாக அந்த நிகழ்வு அமைந்தது.
மதங்க முனியின் காலம் முடிவடையும் வேளையில் அவர் சபரியை அழைத்து ‘என் காலத்துக்குப் பின்னும் நீ இக்குடிலிலேயே இருந்து கொண்டிரு. தகுந்த சமயம் கனிகையில் ராமர் லஷ்மணர் இங்கு வருவார்கள். திருமாலின் அவதாரமான அவர்களுக்கு பூஜையும் பணிவிடையும் செய்யும் பேற்றை நீ பெருவாய். பின் உன் பிறப்பின் பலனை அடைந்து மேலுகம் வருக’ என்று கூறினார். மதங்க முனியின் காலத்துக்குப் பின்னும் சபரி மரியாதையுடனும் பெருமையுடனும் நடத்தப்பட்டாள். ஆசிரமத்துக்கு கைங்கரியம் செய்து கொண்டு தன் வாழ்க்கையை தொடர்கிறாள்.
ஸ்ரீராமரின் தரிசனம் கிட்டும் என்று மதங்க முனி சொல்லிய நிமிடத்திலிருந்து அவள் ஸ்ரீராம நாமத்தை ஜபித்துக் கொண்டும் ஸ்ரீராமரை எதிர்பார்த்தும் காத்திருக்கத் தொடங்குகிறாள். வயதாகி கிழவியான பின்னும் ராமனுக்கான காத்திருப்பு அவளுக்கு அலுப்பையோ ஏமாற்றத்தையோ தரவில்லை. ராமன் என்று வேண்டுமானாலும் எந்நிமிடம் வேண்டுமானாலும் வரலாம் என்று எதிர்நோக்கி அவனுக்காக சிறந்த பழங்களையும் பூஜிக்க புஷ்பங்களையும் தயாராக வைத்த வண்ணமே இருக்கிறாள். எங்கே ராமர் தான் உண்ணும் வேளையில் வந்து விடுவானோ என எண்ணி தன் உணவைத் துறக்கிறாள், உறங்கும் வேளையில் வந்துவிட்டு திரும்பப் போய்விட்டால் என்ன செய்வது என்று அச்சப்பட்டு தன் உறக்கத்தையும் துறக்கிறாள். சதா சர்வ காலமும் ராம நாமத்தை ஜபித்துக் கொண்டு ராமரின் திரு உருவத்தைப் பற்றி சிஷ்யர்களிடம் கேட்டுக் கொண்டு அதே ஸ்மரணையாக தன் ஒவ்வொரு நொடியையும் கழிக்கிறாள் சபரி.
அவளின் காத்திருப்பு வீண் போகவில்லை. ஊண் உறக்கம் தவிர்த்து புலன்களை அடக்கி ராம நாமத்தையே தியானம் செய்து, சபரி சித்தபுருஷி ஆகிவிட்டிருந்தாள். அப்பேர்பட்ட சபரியை ஆரண்ய காண்டத்தில் ராமரும் லஷ்மணரும் சந்திக்கிறார்கள் என்று ராமாயணம் கூறுகிறது.
சபரி கொடுத்த பழங்களை உண்டு முடித்த பின் ராமர் அவளிடம் ‘மதங்க முனிவரைப் பற்றியும் அவரது சீடர்கள் குறித்தும் கேட்டு அறிந்து கொள்கிறார். சபரி மேலும் அவர்களுக்கு சுக்ரீவன் இருக்கும் ரிஷ்யமுக பர்வததுக்குப் போகும் வழியையும் இயம்புகிறாள். அவளின் வழிகாட்டுதலின் பேரில் தான் ராமலக்குவணர் சுக்ரீவன் இருப்பிடம் சென்று அவன் உதவியை கோருகின்றனர்.
பின் சபரி ராமரிடம் ‘ஐயனே உனைக் கண்டும் பூஜித்தும் என் பிறவிப் பயனை அடைந்து விட்டேன். இனி எனக்கு இப்பிறவி போதும். தயை கூர்ந்து உன் முன்னாலேயே உனை தரிசித்த மகிழ்வுடன் இப்பிறவியை முடித்துக் கொண்டு என் குருநாதர் இருக்கும் லோகத்துக்குப் போக அனுமதி அளிப்பாயாக என்று வேண்டுகிறாள். ராமரும் அப்படியே செய் தாயே என்றதும் அக்னியை மூட்டி அதில் வீழ்ந்து தன் பிறவித் தளைகளை அறுக்கிறாள் சபரி. பின் ராமரின் கண்முனே திவ்ய தேகத்துடன் சொர்க லோகம் சென்று மோட்சம் அடைகிறாள் என்று ராமாயணம் குறிப்பிடுகிறது.
மற்றவர்கள் கொண்டாட வேண்டும் என்று சபரி எதையும் செய்யவில்லை. பிற மகரிஷிகளின் த்வேஷத்தையும் கண்டு மனம் தளரவில்லை. ஸ்திரீ தர்மத்தின் படி தன்னால் செய்ய முடிந்தவற்றை எந்தவித விருப்பு வெறுப்புமின்றி செய்து முடித்தவள் சபரி. ஊண் உறக்கம் தவிர்த்து ராமனுக்காக ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு தபஸ்வியை போல வாழ்ந்தவள் என்பதாலேயே அவளுக்கு மோட்ஷம் கிட்டியது.
இங்கே சபரிக்கு ராமபிரான் மோட்க்ஷம் கொடுக்கவில்லை சபரி மோட்க்ஷம் அடைவதற்கு ராமபிரான் சாட்சியாய் இருந்தார் என்பதே சரி. அதனாலேதான் அவள் கேட்காமலேயே ராமபிரான் கொடுக்காமலேயே மோட்க்ஷம் தானாகவே வந்தது.