அதிமுக பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் 5 இடம் தான்! டைம்ஸ் நவ் லேட்டஸ்ட் கருத்துக்கணிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெறும் ஐந்து இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.


ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மெகா கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் அதிமுக 20 இடங்களிலும் பாமக 7 இடங்களிலும் பாஜக 5 இடங்களிலும் களமிறங்குகின்றன.

இதேபோல் திமுக கூட்டணியில் திமுக 20 இடங்களிலும் காங்கிரஸ் 10 இடங்களிலும் இதர கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த நிலையில் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வெற்றி என்று ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்துள்ள அதிமுகவிற்கு மொத்தமாகவே 5 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயம் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு சுமார் 34 இடங்களில் வெற்றி உறுதி என்று டைம்ஸ் நவ் கூறியுள்ளது.

வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு சுமார் 53 விழுக்காடு கிடைக்கும் என்று டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது. பாஜக அதிமுக கூட்டணிக்கு வெறும் 34 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்றும் டைம்ஸ் நவ் கணித்துள்ளது.