ஒரே ஓர் அரச மரத்தில் 19 சுயம்பு விநாயகர்கள்! ஆச்சர்ய ஆலயம் எங்கே இருக்கிறது தெரியுமா?

சென்னை சாலிகிராமம் பரணி காலனி குடியிருப்போர் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது பால விநாயகர் திருக்கோயில்.


ஆற்றங்கரை ஓரத்திலும் அரசமர நிழலிலும் அமர்ந்திருக்கும் ஆனைமுகன், அதிசயமாக ஒரு சில திருத்தலங்களில் சுயம்புத் திருமேனியாக தோன்றுவது உண்டு. ஆனால், ஒரே இடத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... ஒட்டுமொத்தமாக 19 சுயம்பு விநாயகர் வடிவங்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றியிருக்கின்றன. அதுவும் ஓர் அரச மரத்தில்! 

மரத்தின் அடியில் நாகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்க, மரத்தின் அடிப்பகுதியில் கிளைவிட்டிருக்கும் வேர்களில் சின்னச் சின்னதாக விநாயகர் திருமுகங்கள். மரத்தின் நடுப்பகுதியில் நர்த்தன விநாயகர் திருமேனி. ஒரு காலில் நின்று, ஒரு காலைத் தூக்கி ஆடும் அழகுத் திருவுருவம்...! திருவாச்சி, கிரீடம், பஞ்சகச்ச வேஷ்டி முதலிய அலங்காரங்களுடன் திவ்ய தரிசனம் தருகிறார் சுயம்பு விநாயகர். 

இக்கோயிலில் பதினாறு கணபதிகள் உருவச் சிலையை பிரதிஷ்டை செய்ய கோயில் நிர்வாகம் தீர்மானித்தபோது, சிலா ரூபம் வழங்க சிற்பிகள் கால தாமதமாக்கினர். ஆனால் கோயிலின் தென்மேற்கு மூலையில் அமைந்த அரசமரத்தின் அடிப் பாகத்தில் திடீரென கொத்தாக சிவப்பு நிற சல்லி வேர்கள் தோன்றத் தொடங்கின.

அவை நாள்தோறும் வளர்ந்து கிரீடமாகவும், முகமாகவும், தந்தமாகவும், துதிக்கையாகவும் மாறத் தொடங்கியது.  அதுவே நாளடைவில் ஒரு காலை மடக்கி நடனக் கோலத்தில் காட்சி தரும் விநாயகர் உருவில் அருள் பாலிக்கத் தொடங்கினார். 

இந்த சுயம்பு விநாயகர் ஓர் அதிசயமாக இன்று வரை பக்தர்களின் வழிபாட்டுக்குரியதானது.  தல விருட்சமே அரசமரமாக, அரசமரமே விநாயகராக அமைந்த அபூர்வத் தோற்றம் இது.  இந்த சுயம்பு விநாயகரின் தோற்றமும் புகழும் அயல்நாடுகளிலும் பரவி, அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர் என்று வெளிநாட்டு பக்தர்களும் தரிசனத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.   

அரச மரத்தின் கீழ்ப்பாகம் (வேர் பாகம்) பிரம்ம ரூபம். நடு பாகம் விஷ்ணு அம்சம். மேல் பகுதி சிவ ரூபம்! மகா விஷ்ணுவின் பாகத்தில் அவதரித்திருப்பதால், இந்த சுயம்பு விநாயகரை, அனுக்கிரஹ மூர்த்தி என்கிறார்கள்.

தன்னிடம் வந்து, மனமுருகி பக்தர்கள் வேண்டுவதை வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்கிறார் இந்த அரசமரப் பிள்ளையார். ஞாயிற்றுக்கிழமைதோறும், ராகுகாலத்தில் இந்த விநாயகருக்கு சிறப்புப் பூஜை நடக்குது... பக்தர்கள் திரண்டு வந்து வழிபடுகிறார்கள்.