அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்றும் பல அதிசய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.
தானாக நகரும் பாறைகள்! விடை தெரியாமல் விழிக்கும் அறிவியல் உலகம்!
அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத மர்மங்களில் ஒன்றுதான் இந்த நகரும் கற்கள்.
கற்கள் தானாய் நகர்கின்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆச்சரியமாகத்தானே இருக்கிறது. இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கு பகுதியில் நடக்கிறது. மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி ரேஸ்டிராக் பிளாயா எனப்படுகிறது. இங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்களோ, உயிரினங்களோ, மரம் மட்டைகளோ எதுவும் கிடையாது.
இந்த மர்ம பூமியில் தான் கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்கின்றன. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது இன்றும் புதிரான விஷயமாகவே இருக்கிறது. 13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்கின்றன.
பாலைவனம் போன்று பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரதேசத்தில் வறட்சி காலத்தில் நிலம் வெடிப்பு விழுந்து ஓட்டைகளில் ஐஸ் படர்ந்திருக்கும். இந்த பிரதேசத்தில் உள்ள கற்கள் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் முழுப்பிரதேசத்தையும் சுற்றி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணத்தை ஆரம்பிக்கும். சில சமயங்களில் அவற்றில் ஒரு கல் வலது பக்கமோ, இடது பக்கமோ திரும்பி தனது பயணத்தை தனியாக தொடர்வதுண்டு. இந்த பரந்த நிலப்பரப்பிற்கு அருகில் இருக்கும் மலையில் இருந்து கற்துண்டுகள் உடைந்து விழுகின்றன. அந்த துண்டுகளே இந்தப் பூமியெங்கும் நடமாடுகின்றன.
நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இவை நகர்ந்து சென்ற அடையாளங்கள் தெளிவாகக் காணப்படுகின்றது.
ஜேம்ஸ் நோரிஸ் என்பவர், இந்த இடத்தில் தானியங்கிக் கேமராவைப் பொருத்தி ஆய்வு செய்தார். தனது ஆய்வின்போது, சுமார் 60 பாறைகள் தானாக நகர்வதைக் கண்டார். கற்பாறைகள் நகரும்போது, லேசான சத்தமும், அவை நகர்ந்த இடத்தில் தடயமும் தெரிந்தது. பாறைகளை நகர்த்தியது, நீரில் மிதக்கும் சிறிய பனிக்கட்டிகள்தான் என்று கண்டறிந்தார்.
வறண்ட நிலப்பரப்பில் தண்ணீர் எங்கிருந்து வந்தது? குளிர்ப்பிரதேசமான அந்தப் பகுதியில், மழை எப்போதாவதுதான் பெய்யும். குளிர்காலத்தில் மழை பெய்யும்போது, களிமண் பூமி என்பதால் 3செ.மீ. அளவு மட்டுமே தண்ணீர் தேங்கும். அதிகக் குளிரில் தண்ணீர் பனிக்கட்டியாக மாறி, தேங்கிய நீரில் மிதக்கும். காற்று வீசும்போது பனிக்கட்டிகள் கற்பாறைகளின் மீது மோதி, அடிப்பகுதியில் உள்ள களிமண்ணை இளக்கிப் பாறைகளை நகரச் செய்கின்றன.
இதனால், கற்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்கின்றன. தண்ணீர் ஆவியான பின்னர் பாறைகள் நகர்ந்ததன் தடயம் தெரியும். இன்றும் இந்த நகரும் கற்கள் பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.