முதலில் காகங்கள்..! பிறகு நாய்கள்..! கொத்து கொத்தாக செத்து விழுந்த பயங்கரம்..! பூம்புகாரில் குடியிருப்பு பகுதியில் பீதி!

பூம்புகாரின் குடியிருப்பு பகுதியில் காகங்கள் மற்றும் நாய்கள் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. தற்போது மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் அந்த பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் காகங்கள் கூட்டமாய் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன. இதை தொடர்ந்து சற்று நேரத்தில் அங்கிருந்த 50க்கும் மேற்பட்ட காகங்கள் திடீரென சுருண்டு விழுந்து உயிர் இழந்துள்ளன.

தற்போது நிலவிவரும் ஊரடங்கு உத்தரவால் வீடுகளில் இருந்துவரும் மீனவர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே காகங்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேபோல அந்த பகுதியில் மூன்று நாய்களும் மர்ம முறையில் இறந்து கிடந்தன. இதனால் அப்பகுதியில் உள்ள மீனவர்கள் அந்த பகுதியில் இருந்து உயிரிழந்த காகங்கள் மற்றும் நாய்களை அப்புறப்படுத்தி மஞ்சள் வேப்பிலை தெளித்து அந்த பகுதியை தூய்மை ஆக்கினர். பின்னர் இதுகுறித்து போலீசாரிடம் அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசார் காகங்கள் மற்றும் நாய்கள் ஏதாவது நோய்த் தொற்றுகளால் பாதித்து உயிரிழந்தனவா அல்லது யாரேனும் விஷம் வைத்து கொன்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.