வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் சிரமமா..? சிங்கப்பெருமாள் கோயிலில் செய்ய வேண்டிய சிம்பிள் பரிகாரம்.

நரசிம்மர் என்ற பெயரைக் கேட்டாலே உக்கிரமான அவருடைய கோபம் தான் நினைவுக்கு வரும்.


கோபத்தில் மட்டுமல்ல பக்தர்களுக்கு அருள் வழங்குவதிலும் முக்கியமானவர் நரசிம்மர் என்பது சிங்கப் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தவர்களுக்கு தெரியும். சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் செங்கல்பட்டு அருகில் அமைந்துள்ளது சிங்கப்பெருமாள் கோவில்.

கோவிலின் அமைப்பு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சிறிய குன்று ஒன்றைக் குடைந்து அமைந்த கோயில். குன்றே கருவறையாக விளங்குகிறது. பெருமாளை வலம் வரவேண்டுமானால் குன்றையே கிரிவலமாக வரவேண்டும். ஆனால் படிகள் அமைந்திருப்பதால் சங்கடமின்றி சுற்றி வர முடிகிறது. இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

கோவிலின் முதல் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்ம தரிசனம். அருகில் பக்தர்கள் நெய்விளக்கேற்றி வேண்டுதலை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள். மூலவர் எட்டடி உயரத்தில் சங்கு சக்கரத்துடன் நான்கு கைகளோடு காட்சி தருகிறார். இப்பேர்ப்பட்ட பெருமானை மணந்து கொண்டதால் தான் தாயாரை அகோபில வள்ளி என்று அழைக்கிறார்கள். அகோ என்றால் அப்பேர்ப்பட்ட, பில என்றால் குகை.. ஆக அப்பேர்ப்பட்ட குகையில் வாசம் பண்ணுகிறவனுடைய பத்தினி என்பதே அகோபில வள்ளி.

கடன் தொல்லை, பில்லி சூன்ய குழப்பங்கள் பிள்ளைகளின் படிப்பு என்று பலவிதமான பிரச்சினைகளோடு வந்து இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். கோயிலுக்கு வந்துவிட்டுச் சென்ற சில மாதங்களிலேயே மாற்றங்களை உணர்வதால் இங்கே அடிக்கடி தரிசிக்க வரும் பக்தர்கள் அதிகம்.

பிரதோஷ காலத்தில் பிறந்தவர் நரசிம்மர் என்பதால் வேண்டுதலுக்கும் மூலவருக்கு அபிஷேகம் செய்வதற்கும் மாதத்தில் இருமுறை வரும் பிரதோஷ நாட்களே உகந்தது. இந்தக் கோயிலில் விசேச பிரசாதம் பானகம். கோயிலில் பணம் கட்டி விட்டால் அவர்களே பானகம் தயாரித்து பெருமாளுக்கு அபிஷேகமும் செய்து நம்மிடமே கொடுக்கின்றனர். நாமும் அதை நம் கையால் அங்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

மலையைச் சுற்றி வரும் பாதையில் வேண்டுதல் மரம் ஒன்று உண்டு. இந்த மரம் அங்கோளம் என்றும் அழிஞ்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் மகத்துவத்தை ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் ஆச்சி பிறும் ஆயரும் அஞ்சிட பூத்தா நிலகடம் பேறி புகழ் பாய்ந்து என்னும் பாசுரத்தில் கூறப்படுகிறது. மணமாகாதவர்களும், மக்கட்பேறு இல்லாதவர்களும், மாமேதை ஆகும் இலட்சியம் உள்ளவர்களும் தாங்கள் கட்டியிருக்கும் ஈர இழை நூலெடுத்து இம்மரத்தின் கிளையில் எம்பெருமானை நினைத்து ஒரு துணியில் கட்டி மரத்தினடியில் மஞ்சளும் குங்குமமும் பூசி நெய்விளக்கேற்றி பெருமாளுக்கு அர்ச்சனை செய்தால் அவர்கள் நினைத்தது நடக்கும். இது மகான்கள் கண்ட உண்மையாம்.

இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளை வைத்து இத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சொல்லப்படுகிறது. காரணம் பல்லவர் காலத்திய குடைவரைக் கோயில்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட இதே போன்ற அமைப்பில் தான் ஆந்திர மாநிலம் கடப்பா அருகில் உள்ள அகோபிலம் நரசிம்மர் கோயிலும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்துமா, தோல் வியாதி, மூளைக் கோளாறு போன்ற பலவிதமான நோய்களோடு வருபவர்கள் நரசிம்மரால் நிவாரணம் பெறுகிறார்கள். இங்கே சனிக்கிழமைகளில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் இது போன்ற வியாதிகளை குணப்படுத்தும் தன்மை கொண்டது என்பது நம்பிக்கை. மூன்று கண்களோடு மூலவர் இருப்பதால் மற்ற இடத்தில் இருக்கும் நரசிம்மரை காட்டிலும் இங்கிருப்பவருக்கு ஆற்றல் அதிகம் என்கிறார்கள். எனவே அவரது சன்னதியில் வந்து வணங்கினால் நினைத்தது எதுவும் நடக்கும் என்பது ஐதீகம்.