சரவண பவன் சைவ சாப்பாட்டில் தலை முடி! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்! நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

சரவண பவன் உணவகத்தில் உணவு விஷமானதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் அந்த உணவகத்துக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


தமிழகம் மட்டுமன்றி உலகெங்கிலும் சுமார் இரண்டாயிரம் கிளைகளைக் கொண்ட சரவணபவன் தரமான சைவ சாப்பாட்டுக்கு பெயர் பெற்றது. இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள சரவணபவன் உணவகம் கிளை ஒன்றுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு எஸ்.கே.சாமி என்பவர் சென்றார்.

அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட உணவில் முடி இருந்ததாக கூறப்படுகிறது இதனால் அவர் வேறு உணவை கேட்டபோது அவருக்கு மாற்று உணவு வழங்கப்பட்டது. எனினும் அந்த உணவைச் சாப்பிட்டு விட்டு சென்ற பிறகு அவருக்கு தீவிர உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது

அவருக்கு வயிற்று வலி வாந்தி குமட்டல் காய்ச்சல் மற்றும் தோலில் தடிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு தான் சரவணபவனில் சாப்பிட்ட உணவு விஷமானது தான் காரணம் என்று கூறி நுகர்வோர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

தவறான உணவை வழங்கியதற்காக 60 ஆயிரம் ரூபாயும் தனது உடல்நிலை பாதிப்புகளுக்காக 30 ஆயிரம் ரூபாயுமாக அவர் 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு சரவணபவன் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையும் வழக்கை நடத்தும் செலவுகளுக்காக பத்தாயிரம் ரூபாயுமாக ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது