இளையராஜா நிகழ்ச்சி நடக்காது... ஜெயிலுக்குப் போகிறார் விஷால்?

தயாரிப்பாளர் சங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி இளையராஜா நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை கேட்டு ஜே.எஸ்.கே.சதிஷ் கோர்ட் படி ஏறியிருக்கும் நிலையில், காவல் துறையிலும் விஷால் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் இசை நிகழ்ச்சி கேன்சல் செய்யப்படும் என்று தெரிகிறது.


தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த வைப்பு நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார் விஷால். அதனால் அந்த நிதியில் நடக்க இருக்கும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை போடவேண்டும் என்று தயாரிப்பாளர் சதீஷ் நீதிமன்றப் படி ஏறியிருக்கிறார். அந்த வழக்கு திங்களன்று வருகிறது.

அதற்குள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று விஷால் மீது திருட்டுப் புகார் கொடுத்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்களான எஸ்.வி.சேகர், கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன் போன்றவர்கள்.

அவர்கள் காவல் ஆணையரிடம் கொடுத்திருக்கும் புகாரில், ‘‘தயாரிப்பாளர் சங்கத்தின் பணம் 8.45 கோடி ரூபாய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு 3.5 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக கணக்கு காட்டியிருக்கிறார் விஷால். அதேபோல் மேடை அமைப்பதற்காக விஷாலின் நண்பர் ரமணாவுக்கு 3.5 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. சங்கப் பணத்தை எடுத்துக் கொடுப்பதற்கு இவர் யார்?

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துகிறார்கள். ஆனால், அதில் பங்கேற்பதற்கு இளையராஜாவுக்கு 3.5 கோடி ரூபாய் கொடுப்பது விசித்திரமாக இருக்கிறது. ஆனால், இளையராஜா பொதுவாக வெளி நிகழ்ச்சிகளுக்கு 1.5 கோடி ரூபாய் மட்டுமே வாங்குகிறார். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்திடம் மட்டும் ஏன் 3.5 கோடி வாங்குகிறார். அது உண்மைதானா என்பதை இளையராஜா தெரிவிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தை வெளியே எடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகுதான் வைப்பு நிதி எடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார். இளையராஜா நிகழ்ச்சி நடத்தி அந்தப் பணத்தை வைத்துவிடுவதாகவும் சொல்கிறார். இது வாழைப்பழ காமெடி போன்று உள்ளது. ஏற்கெனவே எடுக்கப்பட்ட பணத்துக்குப் பதிலாக இளையராஜா நிகழ்ச்சி நடத்தி பணம் வைப்பது எப்படி சரியாக இருக்கும்? ஏற்கெனவே  உள்ள நிதியுடன் புதிதாக வசூலிக்கப்படும் நிதியையும் சேர்த்து வைக்க வேண்டும். 

இந்த நிதி மோசடியில் ஈடுபட்டிருக்கும் விஷாலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே ஆளும் கட்சிக்கும் விஷாலுக்கும் வாய்க்கா தரப்பு ஓடிக்கொண்டு இருக்கிறது. அதனால் விஷாலுக்கு சிக்கல்தான்.