பித்ருக்கள் ஆசிர்வாதம் வேண்டுமா? டோலி தரிசனம் போதுமே

முன்னோர்களின் ஆசியைப் பெற ஆடி தை அமாவாசை தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும் தலங்களுள் ஒன்று புராணத்துடன் தொடர்புடைய மத்திய மகேஸ்வரர் கோயில்.


குருசேத்திரப் போரில் கௌரவர்களை எதிர்த்து பாண்டவர்கள் கடும் போர் புரிந்தனர். ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அதனால் ஏற்பட்ட பாவத்திற்கு பரிகாரம் நாடி பரமேஸ்வரனை நோக்கி சென்றனர் பாண்டவர்கள். அப்போது அரனார் அவர்களுக்கு தரிசனம் காட்டாது மறைந்து விட்டார். அதற்குப் பதிலாக பசுவின் ஐந்து உறுப்புகளை ஐந்து இடங்களில் விழச்செய்த பரமேஸ்வரன், அந்த இடங்களில் தனக்குக் கோவில் கட்டி வழிபட்டால் பாரதப்போரில் உங்களுக்கு ஏற்பட்ட கொலைப் பாவம் தீரும் என்றும் அத்துடன் இங்கு வந்து என்னை வழிபடுவோருக்கு பித்ரு தோஷம் விலகும் என்றும் அசரீரியாகத் தெரிவித்தார்.

அதன்படி ஐந்து இடங்களில் கோவில் கட்டி அவரை வணங்கி நற்கதி அடைந்தனர் பாண்டவர்கள். அப்படி அவர்களால் கட்டப்பட்டவை பஞ்சகேதரர் ஆலயங்கள் எனப்படுகின்றன. அவற்றுள் ஈசனின் தொப்புள் பகுதி விழுந்த தலமே உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ள மத்திய மகேஸ்வரர் ஆலயம்.

பளபளப்பான கருங்கற்களை கொண்டும் உறுதியான மரங்களைக் கொண்டு அற்புதமாக ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண் நிறைந்த பூமியின் மேல் பச்சை பசேலென்று வெல்வெட் போல காணப்படும் புல்தரையும் அதன் மேல் படர்ந்திருக்கும் பனித்துளியின் மீது சூரிய ஒளிபட்டு வைரம் போல் மின்னுகின்ற காட்சியும் காண கண் கோடி வேண்டும். கோவிலின் முன்பு பெரிய மணி தாங்கிய வளைவு நம்மை வரவேற்கிறது. கோயிலின் கோபுர உச்சியில் தங்கத்தாலான கலசம் இருக்கிறது. சூரிய ஒளி கோவிலின் கிரானைட் கற்களின் மீது பட்டு கண்ணாடி போல பிரகாசிக்கிறது. கருவறையில் பரமேஸ்வரன் லிங்க ரூபத்தில் காட்சி தருகிறார்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 80 வயது பூஜாரி ஒருவர் இங்கு வழிபாடு செய்து வருகிறார். பூஜை செய்து பக்தர்களுக்கு விபூதி குங்குமத்தை நெற்றியில் இட்டு விடுவார். பிரசாத தீர்த்தமும் தருவார். இதில் அனைத்து நதிகளும் அடங்கியிருப்பதாக நம்பிக்கை.

ஏப்ரல் மே மாதங்களில் இங்கு பெரிய திருவிழா நடைபெறும். அதில் டோலி கொண்டு செல்லுதல் என்னும் உற்சவம் மிகப்பிரபலம். அப்போது துங்கநாத் மற்றும் கேதார்நாத் ஈஸ்வரனை வெள்ளித் தட்டில் படமாக வரைந்து அதை ஒரு பல்லக்கில் வைத்து சிவப்பு பட்டுத்துணியால் மூடி மறைத்து ஊர்வலமாகக் கொண்டு சென்று பின்பு ஆலயத்தை அடைந்து மகேஸ்வரர் அருகே வைத்து சிறப்பு பூஜை செய்வார்கள்.

நமது மூதாதையர்களுக்கு நாம் தை அமாவாசை, ஆடி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யாமல் இருந்தாலோ, அதனால் பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாகியிருந்தாலோ இந்த டோலி தரிசனத்தை ஒருமுறை கண்டாலே போதும், நாம் செய்த பாவங்கள் தீரும்; புண்ணியம் சேரும்; குடும்பத்தில் ஏற்பட்ட சகல கஷ்டங்கள் நீங்கும்; நீத்தார்கடன் செய்த பாக்கியம் கிட்டும்; பித்ருக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்பது ஐதீகம். எனவே அன்று ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.