கொரோனா வைரஸ் எதிரொலி! ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு!

வருகிற மார்ச் 29-ம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.


பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் ஐபிஎல் போட்டிகள் வருகிற 29ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டபடி நடத்தலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த மாதம் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை என்று பிசிசிஐ அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.