சேப்பாக்கத்தில் பயிற்சியை ரத்து செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! தோனி ரசிகர்கள் ஏமாற்றம்!

கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் பதினைந்தாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் நடத்திவந்த பயிற்சியை ரத்து செய்துள்ளனர்.


முன்னதாக ஐபிஎல் போட்டிகள் இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்க இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஐபிஎல் போட்டிகளை திட்டமிட்டபடி நடத்தலாமா வேண்டாமா என்ற ஆலோசனை நேற்று நடைபெற்றது.

இந்த ஆலோசனையின் முடிவில் பிசிசிஐ இந்த மாதம் 29ம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளை அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாகவே மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தற்காலிகமாக மைதானத்தில் நடத்தி வந்த பயிற்சியை ரத்து செய்துள்ளனர். 

இது தோனி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஏனெனில் தோனி கடந்த பல மாதங்களாகவே சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவில்லை. அவர் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை பார்க்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுவந்த பயிற்சியும் ரத்து செய்யப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் தோனியை பார்க்க முடியாமல் போனதே என்ற சோகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.