கொரானாவிற்கு எதிராக களமிறங்கிய உலகக்கோப்பை நாயகனுக்கு ஐசிசி பாராட்டு..!

கொரானாவிற்கு எதிராக தீவிரமாக பணியாற்றி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜோகிந்தர் சர்மாவை "ரியல் வேர்ல்ட் ஹீரோ" என ஐசிசி புகழாரம் சூட்டியுள்ளது.


கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை 20-20 போட்டியில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் களம் இறங்கியது. அந்த போட்டியில் கடைசி ஓவரில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜோகிந்தர் சர்மா வழிவகுத்தார். அவருடைய சிறப்பான பந்துவீச்சு இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் பெருமையாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ஜோகிந்தர் சர்மா ஹரியானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவி ஏற்று தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். உலகமே கொரோனா பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் தனது பணியை சிறப்பாக செய்து வரும் அவரை ஐசிசி "ரியல் வேர்ல்டு ஹீரோ" என புகழாரம் சூட்டியுள்ளது.

இதுகுறித்து ஜோகிந்தர் சர்மாவிடம் பேசும்பொழுது அவர் தன்னுடைய பணி அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஹரியானா மாநிலத்தில் டிஎஸ்பியாக பதவியேற்று வருகிறேன். பொதுவாகவே போலீஸ் பணி என்பது சற்று சவாலான பணிதான். அதிலும் தற்போது கொரானாவை எதிர்த்துப் போராடும் வகையில் உலகமே முடங்கி கிடக்கிறது.  


இதனால் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களை கண்காணித்து அவர்களை வீடுகளுக்கு அனுப்பும் பணியை நாங்கள் செய்து வருகிறோம். அனாவசியமாக எந்தத் தேவையும் இன்றி வீடுகளை விட்டு வெளியே வருபவர்களின் மீது நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தினமும் காலை 6 மணி முதல் எங்களுடைய ரோந்து பணி துவங்குகிறது இதனை அடுத்து நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.