டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை 4 நாட்களாக குறைத்து ஐசிசி அதிரடி திட்டம்! எப்போது முதல் தெரியுமா?

வருகிற 2023 ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நான்கு நாட்களாக நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


கிரிக்கெட் உலகில் T20 போட்டிகள் ஆரம்பித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ரசிகர்களின் ஆர்வம் குறைந்து வருகிறது. டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக கடந்த சில காலங்களாகவே பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முக்கிய திட்டமாக டெஸ்ட் போட்டிகள் பகலிரவு போட்டியாகவும் நடைபெற்று வருகிறது. நீண்ட காலங்களாக பகல் இரவு பெஸ்ட்போட்டிகள் ஆடாத இந்திய அணியும் கடந்த மாதம் தனது முதல் பகல் இரவு போட்டியை பங்களாதேஷ் அணியுடன் விளையாடியது. 

மேலும் டெஸ்ட் போட்டிகளில் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி நடத்தி வருகிறது. இதனிடையே டெஸ்ட் போட்டிகளில் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்துவதற்காக வருகிற 2023 ஆம் ஆண்டிலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர் 4 நாள் போட்டிகள் ஆக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக ஐசிசி முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது உள்ள முறைப்படி 5 நாட்கள் நடக்கும் போட்டிகளில் ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்பட வேண்டும். இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைப்பதன் மூலமாக ஏற்படும் இழப்பைக் குறைக்கும் விதமாக ஒரு நாளுக்கு 98 ஓவர்கள் வீதம் வீசப்படும் எனவும் ஐசிசி முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் டெஸ்ட் போட்டிகளில் 58 ஓவர்கள் மட்டுமே குறையும் என்பதால் இது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இவ்வாறு டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைப்பதன் மூலமாக மீதமுள்ள நாட்களில் மற்ற கிரிக்கெட் தொடர்களை நடத்திக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.