அவுட்டுக் காய்..! புல் என்று வாய் வைத்த பசுவின் தாடை பிய்ந்து தொங்கிய பயங்கரம்! வேலூர் அதிர்ச்சி!

வேலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் பசு ஒன்று சிக்கிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது.


அணைக்கட்டு அருகே தோலப்பள்ளி கடலைக்குலத்தை சேர்ந்த விவசாயி கண்ணையா மேய்ச்சலுக்காக தனது மாடுகளை அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென வெடிச்சத்தம் கேட்கவே பதறிப்போன விவசாயி உடனே அங்கு சென்று பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து தனது பசுமாட்டின் வாய் சிதைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதையடுத்து விவசாயி கண்ணையா வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் விசாரணை செய்ததில் அங்கு மர்மநபர்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து பசு மாடு காயமடைந்தது தெரியவந்தது. வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலத்தில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் நாட்டு வெடிகுண்டுகளை மர்ம நபர்கள் அங்கு வைத்து சென்றதும் தெரியவந்துள்ளது.

இது தெரியாமல் அங்கு மேய்ச்சலுக்காக வரும் ஆடுகள் மற்றும் மாடுகள் அதை சாப்பிட முயலும்போது வெடி குண்டு வெடித்து உயிரிழக்கின்றன என்றும் தெரியவந்துள்ளது. இதுபோன்று வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.