வெங்காயம் இல்லாமல் வத்தக்குழம்பு செய்வது எப்படி தெரியுமா?

வத்தக்குழம்புக்கு சாதாரணமாக சின்ன வெங்காயம் வதக்கி செய்தால் ருசியாக இருக்கும். ஆனால் வெங்காயம் இல்லாமல், மிளகு, கறிவேப்பிலை உளுத்தப்பருப்பு பொடித்து போட்டு செய்து பாருங்கள். இந்த சுவை வித்தியாசமானதாக இருக்கும்.


தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு

நல்லெண்ணைய் - 1/4 கப்

உப்பு - தேவையானது

சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

சுண்டைக்காய் வற்றல் – வேண்டிய அளவு

அரைக்க: மிளகு – 1 ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு

உளுத்தப்பருப்பு – 1 ஸ்பூன்

தாளிக்க :

கடுகு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - 1 துண்டு

செய்முறை :

சுண்டைக்காயை நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். வாணலியில் மிளகு, உளுத்தப்பருப்பு, கறிவேப்பிலை ஆகிய மூன்றையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். புளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.

வாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்தபின் மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து சிறிது வதக்கிய பின்னர் அதில் புளிக்கரைசல், உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதிக்கும் போது அரைத்த பொடியை அதில் சேர்க்கவும்.

குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலந்து இறக்கவும். உளுத்தம் பருப்பு பொடித்து அரைப்பதால் குழம்பு கெட்டியாகி விடும். அதனால் அரிசி மாவு சேர்க்கத் தேவையில்லை.