வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கம் ஏன் வந்தது தெரியுமா? நினைத்துப் பார்க்க முடியாத தத்துவம் இது!

ஆதி காலத்தில் மனிதன் மரங்களிலும், குகைகளிலும் வாழ்ந்து வந்தான்.


பின்னர் காலம் செல்லச் செல்ல சிறு சிறு வீடுகளை கட்ட ஆரம்பித்தான். அவ்வாறு வீடு கட்டும் போது, கண்ணுக்குத் தெரியாத பல நுண்ணுயிர்கள் மடிந்தன. உயிர்களை கொல்வது பாவச் செயலாகும். இது மனிதனை மிகவும் வதைத்தது. ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தான். 

வீடு கட்டி முடித்த பின்னர், அரிசி மாவை மணல் போல திரித்து அதில் வீட்டின் முன் கோலம் போட ஆரம்பித்தான். கோலத்தில் இருக்கும் அரிசியை சாப்பிட எறும்பு மற்றும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் வந்தன. இதனால் உயிர்களை கொன்ற பாவங்கள் தீர்ந்துவிட்டது என்று நிம்மதியாக இருந்தான். கோலமும் வீட்டின் முன் மிகவும் அழகாக இருந்தது. 

அரிசி மாவில் போடுகின்ற கோலம் சம்பிராதய பழக்கம் மட்டுமல்ல, சகல உயிர்களையும் தன்னுயிர் போல் பாவித்து அவைகளுக்கும் உணவளிக்கும் உயர்ந்த தானம் அவற்றில் மறைந்திருக்கிறது. உணவுக்கே அரிசி இல்லாத மனிதன் கோலம் போட அரிசிக்கு எங்கே போவான். அதனால் மாக்கோலத்தை வலியுறுத்திய இந்து மதம் மண்ணால் போடுகின்ற கோலத்தையும் தவறில்லை என்று ஏற்றுக்கொண்டது. 

அரிசியை தவிர்த்து மண்ணால் போடுகின்ற கோலத்திற்கு கூட தத்துவம் இருக்கிறது. சந்தனமும், ஜவ்வாதும், பாலும், நெய்யும் போசித்து வளருகின்ற இந்த உடம்பு ஒரு நாள் மண்ணோடு மண்ணாக போகப்போகிறது. தினசரி காலை நேரம் கோலம் போட அந்த மண்ணை தொடுகின்ற பெண், நானும் ஒரு நாள் இப்படி தான் ஆவேன் என்று வாழ்வின் நிலையாமையை யோசித்தாள் என்றால் அவளுக்கு பேராசை என்பது வராது. 

வண்ணக்கோலம் மட்டுமே அழகானவை என்பது இல்லை. மாவாலும், மண்ணாலும் போடப்படும் கோலங்கள் தான் உண்மையான அழகை வெளிப்படுத்துகின்றன. எனவே வண்ணங்களை தவிர்த்து மாவாலும் மண்ணாலும் கோலங்களை போடுவோம்.