சிறையில் இருந்து வரும் சசிகலாவின் வருகையை தமிழகம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்..?

சிறையில் இருந்து சசிகலா விரைவில் வெளியே வர இருக்கிறார். குற்றவாளியான சசிகலாவின் வரவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து பச்சைத் தமிழகம் கட்சியின் சுப.உதயகுமார் பதிவு இது.


நீண்டகால சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வரவிருக்கும் திருமதி சசிகலா மீண்டும் பொதுவாழ்க்கைக்குத் திரும்பக்கூடாது. அப்படியே அவர் பொதுவாழ்வில் ஈடுபட்டாலும், தமிழ்ச்சமூகம் அவரை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்!

எதை விற்றாவது பணம் பண்ண வேண்டும் என்கிற நிலைப்பாடு கொண்ட சில ஊடகங்களும், யாரைப்பிடித்துத் தொங்கியாவது, அரசியலில் அஸ்தமனம் அடைந்துவிடக் கூடாது என்று துடிக்கும் சில அரசியல்வாதிகளும், சிறையிலிருந்து வெளிவரவிருக்கும் திருமதி. சசிகலாவைத் தூக்கிப்பிடிக்க தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.

திருமதி சசிகலா ஊழல் வழக்கில் சிறைசென்று வெளியே வருகிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவருக்கு தமிழ்ச் சமூகம் அரசியல் மறுவாழ்வு கொடுப்பது என்பது ஒரு மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். மக்கள் பணத்தைத் திருடவும், திருடியப் பணத்தைக் காப்பாற்றவும் பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்களை நாம் புறக்கணித்தேயாக வேண்டும்.

சட்டத்துக்குப் புறம்பாக சொத்துக் குவித்ததைத் தவிர, வேறு எந்த விதமானக் கொள்கையும், தகுதியும், திறமையும் உள்ள நபரல்ல அவர். உழைத்துவாழும் உண்மைமிக்க தமிழ்ச் சமூகத்தை எங்கேயும் இட்டுச்செல்லும் கனவோ, திட்டமோ, குறிக்கோளோ உடையவரும் அல்ல. செல்வி. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை திருமதி. சசிகலா திரைமறைவு வேலைகளில்தான் ஈடுபட்டிருந்தாரே தவிர, பொதுவாழ்க்கையில் நேரடியாக, பெரிதாகப் பங்கேற்கவில்லை.

பின்னர் முதல்வராகும் முயற்சியில் இறங்கி அது மோடி அரசால் முறியடிக்கப்பட்டது. கடந்த ஆறாண்டுகளில் மோடி செய்த ஒரே உருப்படியான விடயம் இது ஒன்றுதான். பின்னர் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு, கைதாகிச் சிறை சென்றார் சசிகலா. அதுவும் ஓரிரு வாரங்கள் அல்ல, நான்காண்டுகள் சிறைத் தண்டனை.

ஆனால் அவரை ஒரு கூட்டம் “தியாகத் தாய்” என்றெல்லாம் வாழ்த்தி, வழுத்தி அவரால் பயனேதும் கிடைக்குமா என்று காத்துக்கிடக்கிறது. திருமதி. சசிகலா செய்த “தியாகங்கள்” போதும். அவர் வெளியே வந்ததும் தன் “தியாக வாழ்வை” அவருடைய வீட்டிலேயே வாழ்வதுதான் தமிழ்ச் சமூகத்துக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

இப்போதே அரசியல் என்பது குற்றவாளிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. சிறு குற்றவாளிகள் மட்டுமின்றி, சசிகலா போன்ற பெரும் குற்றவாளிகளும் களத்தில் இறங்கி இன்னும் களங்கப்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. இல்லையென்றால் நாளை இன்னும் அதிகமான கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், பாலியல் பலாத்காரவாதிகள் சிறையிலிருந்து வெளியே வந்ததும், நேராக சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் வந்தமரும் அவலம் எழுந்துவிடும்.

வருங்காலத் தலைமுறைகளுக்கு ஒரு மிக முக்கியமான பாடத்தை நாம் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்கிறது. பொதுவாழ்க்கைக்கு வந்து தவறு செய்தவர்கள், தவறுகள் நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்தவர்கள் தமிழகத்தில் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது எனும் மிக முக்கியமானப் பாடத்தை நாம் அவர்களுக்குக் கற்பித்தாக வேண்டும்.

ஊடகங்களும், ஊடகர்களும் தயவுசெய்து சசிகலாவுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். பணம் ஒன்றே குறிக்கோளாய் இயங்குபவர்களுக்கு சசிகலா லாபம் பெற்றுத்தருபவராகக் காட்சியளிக்கலாம். அப்படிப்பட்ட பொறுப்பற்ற ஊடக வியாபரிகளையும் சேர்த்தே தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் தயவுசெய்து குற்றவாளிகளை தலைவர்களாக அங்கீகரிக்காதீர்கள், அவர்களோடு கைகோர்க்க முன்வராதீர்கள். தங்கள் சுயநலன்களை மட்டுமே கருத்தில் கொள்கிறவர்கள்தான் சசிகலா போன்ற தவறானவர்களைத் தூக்கிப்பிடிக்கிறார்கள். தமிழ்ச்சமூகத்தின் நீண்டகால நலன்கள் குறித்துக் கவலைப்படுகிறவர்கள் நிச்சயம் அந்தத் தவறைச் செய்யமாட்டார்கள்.

உண்மையான, உழைத்து வாழும் குடும்பங்களைச் சார்ந்த தமிழ் இளைஞர்கள் சசிகலா போன்ற தவறானத் தலைவர்களை ஏறெடுத்தும் பார்க்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.