இன்னமும் எத்தனை காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும் மிஸ்டர் ரஜினி..?

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலுக்கு வருவதைப் பற்ற் பேசிக்கொண்டே இருக்கிறார் ரஜினிகாந்த். இது குறித்து தன்னுடைய ஆழமான கருத்தைப் பதிவு செய்திருக்கிறார், பிரபல பத்திரிகையாளர் குமரேசன்.


அரசியலுக்கு வருவதோ, வராமல் இருப்பதோ அவரவர் சொந்த விருப்பம், உரிமை. மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பதே என் கருத்து. அவருடைய ரசிகர் மன்றத்தினரை விடுங்கள், அதன் நிர்வாகிகளை விடுங்கள், அவர் மீது அன்பும் அபிமானமும் உள்ள மக்களை இப்படிப் பரபரப்பிலும் குழப்பத்திலுமே வைத்திருப்பது நியாயமா? இது நல்ல தலைமைப் பண்பா?

அரசியலுக்கு வருவது என்றால் நேராக ஆட்சியைப் பிடிப்பதுதானா? மக்களின் பிரச்சினைகளில் தலையிடுவது, தீர்வு காண்பதற்காகப் போராடுவது, சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஊராட்சிமன்றத்திலும் வாதாடுவது என்றெல்லாம் ஈடுபடுவதுதானே அரசியல் வருகை? அப்படி சமூக அக்கறையோடு அரசியலில் செயல்படுகிறவர்கள் இல்லையா?

கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றிபெற்றால், தான் அரசுப் பொறுப்புக்கு வரப்போவதில்லை என்றும், கட்சிப் பிரதிநிதிகள்தான் பதவியேற்பார்கள் என்றும் அவர் சொல்லியிருப்பது நல்ல விசயம்தானே என்றால் நல்ல விசயம்தான். அது புதிதல்ல. இப்படி கட்சித் தலைமையே ஆட்சித் தலைமைக்கும் வருவது என்பது இல்லாமல் இயங்குகிற கட்சிகள் ஏற்கெனவே இருக்கின்றன. 

ஆனால், ஒருவேளை இவருடைய கட்சி ஆட்சியமைப்பதாக வைத்துக்கொள்வோம், அப்போது ஆட்சிப் பொறுப்புக்கு வருகிறவர் சுதந்திரமாக, சுயேச்சையாகச் செயல்பட அனுமதிப்பாரா? ஒரு பிரச்சினையில் இவருடைய நிலைப்பாட்டுக்கு மாறாக அந்த ஆட்சியாளர் போவாரானால் விட்டுவிடுவாரா? அதனால் முதலில் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகச் சரியான கண்ணோட்டங்களுக்கு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.