கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இத்தனை கோடி கொடுத்ததா தி.மு.க? அதுசரி, எடப்பாடி பா.ஜ.க.வுக்கு கொடுத்தது எவ்வளவு?

இப்போது தமிழகத்தில் அரசியல்வாதிகள் ஆச்சர்யமாகப் பேசும் விவகாரம் ஒன்று உள்ளது. அது, தேர்தல் செலவுக்காக கம்யூனிஸ்ட் மற்றும் கொங்கு கட்சிக்கு தி.மு.க. பணம் கொடுத்ததாக தாக்கல் செய்திருக்கும் அறிக்கை விவகாரம்தான்.


தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாமே, தங்கள் செலவுக் கணக்கை, தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி. அதன்படி தி.மு.க தனது தேர்தல் செலவு குறித்த பிரமாணப் பத்திரத்தைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 15 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும், இன்னொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தி.மு.க தேர்தல் செலவாக கணக்குக் காட்டியது ரூ.79.26 கோடி எனவும் அதில் இந்த மூன்று கட்சிகளுக்கு மட்டும் 40 கோடி ரூபாய் அளித்தாகவும் தகவல் வெளியானது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடைய பிரசார செலவுகளுக்காக ரூ 58,93,994 ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும் அதில் பெரும்பங்கு விமான செலவுக்காகச் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க நிதி வழங்கிய விவகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் இதுவரை பூடமாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, யாரும் ஆம், இல்லை என்று தெளிவாக சொல்லவில்லை. ஆகவே, தி.மு.க. கொடுத்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

தி.மு.க. எப்போதும் பணம் வாங்கியே பழக்கப்பட்ட கட்சி, அது எப்படி பணம் கொடுத்தது என்பதுதான் பலருக்கும் ஆச்சர்யம். அதே நேரம் தி.மு.க. கொடுத்த விவகாரம் வெளியில் வந்துவிட்டது, ஏன் இன்னமும் எடப்பாடி அவரது கூட்டணி கட்சிகளுக்கு வழங்கிய நிதி விவகாரம் வெளியே வரவில்லை?

சொல்லுங்க புரோ... சொல்லுங்க.